| அஞ்சுதல், கடவுளர் உலகுக்கு வந்து மக்களுடன் நேருக்கு நேர் உரையாடுவது, கவுந்தியடிகளின் கோபத்தினால் இரு தூர்த்தர்கள் நரிகளாகியது, கண்ணகியின் சினத்தினால் மதுரை மாநகர் தீக்கிரையானது, கண்ணகியும் கோவலனும் வானுலகேறியது முதலிய பல செய்திகள் நம்பத்தகாத நிகழ்ச்சிகளாக உள்ளன. எனினும், அவற்றைக் கொண்டு கண்ணகியின் வரலாற்றையே முற்றிலும் ஒரு புனைகதை என்று தள்ளிவிடக்கூடாது. இளங்கோவடிகள் இயற்றிய கண்ணகியின் கதை இலக்கியத்துக்குப் புதியதொன்றன்று எனவும், ஏற்கெனவே தமிழ் இலக்கியத்தில் உள்ள செய்திகள் சிலவற்றைக் கொண்டு இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தைப் பாடினார் என்றும் சிலர் கூறுவர். நற்றிணைப் பாட்டு55 ஒன்றில், ‘ஏதிலாளன் கவலை கவற்ற ஒருமுலையறுத்த திருமா வுண்ணி’ என்னும் குறிப்பு ஒன்று உள்ளது. இத் ‘திருமா வுண்ணி’ என்னும் பெயர் கண்ணகியைச் சுட்டுகின்றது என்று கருதுவர். கூர்ந்து நோக்கின் இத் திருமாவுண்ணியைப் பற்றிய செய்திக்கும், கண்ணகி வரலாற்றுக்கும் இடையே உற்ற முரண்பாடு நன்கு விளங்கும். திருமாவுண்ணியைப் பற்றிக் ‘கேட்டோ ரனையா ராயினும், வேட்டோரல்லது பிறரின் னாரே’ (அஃதாவது, கேட்டார்களாயினும் அவளிடத்து அன்பு வைத்தவர் மட்டும் வருந்துவரேயன்றிப் பிறர் வருந்தார்) என்று அந்நற்றிணைப் பாடல் கூறுகின்றது. ஏதிலாளன் செயலாலே கவலையுற்ற திருமாவுண்ணி என்பாள் ஒரு பரத்தையாதல் வேண்டும். தான் காதலித்த தலைவன் தன்னைக் கைவிட்ட காரணத்தினால் வெகுண்டு அவள் தன் இரு முலைகளில் ஒன்றை அறுத்துக் கொண்டனள். அச் செயல் கேட்ட அனைவரும் அவளிடத்து இரக்கங் கொண்டனர் ; ஆனால், அவள் செய்கைக்கு அவர்கள் வருந்தவில்லை. அவளிடத்தில் அன்புடையவர்கள் மட்டுமே வருத்தமுற்றனர். இப்பாடல் பரத்தை ஒருத்தி பாணற்காயினும், விறலிக்காயினும் தன் இன்னலைச் சொல்லுவது போன்று அமைத்த அகத்துறைப் பாடலாகும். எனவே, இத் திருமாவுண்ணியின் கதையே சிலப்பதிகாரம் என்னும் மாபெருங் காப்பியமாக மலர்ந்தது என்று கருதுவது பொருத்தமற்றதாகும். தன்னைக் கைவிட்ட கணவன் மேல் வெகுண்ட பெண்கள் தன் முலையொன்றை அறுத்துக் கொள்ளும் வழக்கம் தமிழகத்தில் அந்நாளில் உண்டுபோலும். கண்ணகியைப்பற்றிய வரையில் அவளிடத்து அன்பு வைத்தவர்கள் என்றும், அன்பு வையாதவர்கள் என்றும் வேறுபாடுகள் 55. நற்றி. 216 |