பக்கம் எண் :

172தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

விட்டன. தமிழகத்தில் குடியேறிய ஆரியர்கள் சமயக் கதைகள் பலவற்றைப்
புனைந்து பரப்பிவிட்டனர். அவர்கள் வேள்விகள் வளர்க்கத் தொடங்கினர்.
அதற்கு மன்னரின் துணையை நாடிப் பெற்றனர். பல்யாகசாலை முதுகுடுமிப்
பெருவழுதி என்ற மன்னன் சங்க காலத்தின் இறுதியில் வாழ்ந்திருந்தவன்.
அவன் அந்தணருக்குப் பல வேள்விச் சாலைகளை அமைத்துக் கொடுத்தும்,
பல வேள்விகளை வேட்பித்தும் தன் பெயருக்குமுன் ‘பல்யாகசாலை’ என்ற
விருது ஒன்றைப் பெற்றுக்கொண்டான். இராசசூய வேள்வி வேட்டுச் சோழ
மன்னன் ஒருவன் ‘இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி’ என்ற பட்டம்
பெற்றான். பல்யானைச் செல்கெழு குட்டுவன் என்ற சேர மன்னன் பாலைக்
கவுதமனார் என்ற புலவர் ஒருவரின் உதவியுடன் ஒன்பது வேள்விகள்
வேட்பித்தான்.

     சங்க காலத்திலும் ஊழையும் கடவுளையும் பொய்யெனக் கருதியவர்கள்
இருந்தனர். அக்காலப் புலவர்கள் அவர்களுடைய கொள்கையை
ஏற்றுக்கொண்டிலர்; வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் அதை அவர்கள்
வன்மையாக மறுத்து வந்தனர்.230 ‘உலகத்தார் உண்டு என்பது இல்என்பான்
வையத்து அலகையா வைக்கப் படும்’231 என்று திருவள்ளுவரும் அக்
கொள்கையினரைக் கடிந்து பாடியுள்ளார். ‘குணம் குறிகளைக் கடந்தும், மனம்
மெய்களுக்கு எட்டாமலும் உள்ள ஒருவனே இறைவன்’ என்ற பொருளைக்
குறிக்கும் ‘கடவுள்’ என்னும் சொல் தமிழில் சிறப்புடைய சொற்களில்
ஒன்றாகும்.232 இச் சொல் சுட்டும் கருத்துச் சங்க காலத்தில் நன்கு வளர்ச்சி
பெற்றிருந்தது.233 சிவன் முழுமுதற் கடவுளாகக் கொள்ளப்பட்டான்.

     பண்டைய தமிழகத்தில் சங்க காலத்தில் சிறுதெய்வ வழிபாடும்
நடைபெற்று வந்தது. ‘கள்ளி நிழற்கடவுள்’234. ‘கூளி’235, ‘பேய்’236 ஆகிய
தெய்வங்கட்கும் மக்கள் வணக்கம் செலுத்தி வந்தனர். உற்பாதங்களிலும்,
தீயகனவுகளிலும், பறவை நிமித்தத்திலும், விண்ணினின்றும், கொள்ளி மீன்
விழுவதிலும், உன்னமரம் பூத்ததிலும் மக்கள் பின்னர் நிகழவிருந்த
நிகழ்ச்சிகளை முன்னரே அறிவிக்கும் குறிகளைக் கண்டனர்.

     230. புறம். 29 : 11, 52.
     231. குறள். 850.
     232. புறம். 106, 399.
     233. புறம். 100 : 7 ; கலித். 10 : 7
     234. புறம். 260.
     235. புறம். 23.
     236. புறம் : 37, 238, 369, 373.