| அரச பரம்பரை சேரர் சங்க இலக்கியத்தில் முந்நூற்றுக்கு மேற்பட்ட மன்னர்களின் பெயர்கள் காணப்படுகின்றன. ஆனால், அவர்களுடைய அரசியல் வரலாற்றைத் தொடர்ச்சியாக எழுதுவதற்கான குறிப்புகள் சங்க நூல்களில் கிடைக்கவில்லை. வேந்தர்கள் பலர் வியப்பூட்டும் வீரச்செயல்கள் ஆற்றியுள்ளனர். பாரதப்போரில் பங்கு கொண்டவரெனக் கூறப்படும் மன்னர் மூவரின் பெயர்கள் சங்கப் பாடல்களில் காணப்படுகின்றன. வரலாற்றில் நம் கருத்தை முதன் முதலாகக் கவர்பவன் உதியஞ்சேரல் என்னும் சேர மன்னனாவான். பாரதப்போரில் கலந்துகொண்ட கௌரவ, பாண்டவ சேனைகளுக்குப் பெருஞ்சோறு வழங்கினான் இம் மன்னன் என்று தமிழ் இலக்கியத்தில் சில குறிப்புகள் காணப்படுகின்றன.237 இப்போது மறைந்து கிடக்கும் பதிற்றுப்பத்தின் முதற்பத்தின் பாட்டுடைத் தலைவன் இவனே என்று எண்ண இடமுண்டு. பாரதப் போரில் சோறு வழங்கியவன் இச் சேர மன்னன்றானா என்பதைப் பற்றிப் பல கருத்து வேறுபாடுகள் ஆய்வாளரிடையே காணப்படுகின்றன. இவன் மகன் இமயவரம்பன் இரண்டாம் பத்துக்குப் பாட்டுடைத் தலைவனாக விளங்குகின்றான். இவன் அரபிக் கடலில் கடற்கொள்ளை நடத்தி வந்த கடம்பர்களை வென்று அவர்களுடைய காவல் மரமான கடம்பை அறுத்து வெற்றிக்கொடி நாட்டினான். இவன் யவனர்களைப் பல போர்களில் தோல்வியுறச் செய்தான்.238 வடஇந்தியாவில் இமயமலை வரையிலும் படையெடுத்துச் சென்று ஆரிய மன்னரை வணங்கவைத்தான்.239 இவனைப் பற்றிக் குமட்டூர்க் கண்ணனார் பாடிய பாடல் பதிற்றுப்பத்தில் இரண்டாம் பத்தாகச் சேர்க்கப்பட்டுள்ளன. சேர மன்னருள் மிகவும் சீருடனும் சிறப்புடனும் திகழ்பவன் சேரன் செங்குட்டுவன் ஆவான். இவன் இமயவரம்பனுக்கு இரண்டாம் மனைவியின்பால் பிறந்தவன். சோழன் கரிகாலன் இறந்த பிறகு அவனுடைய மகன் கிள்ளிவளவன் அரசுகட்டில் ஏறாதவாறு சோழ இளவரசர்கள் எழுவர் கிளர்ச்சி செய்தனர். செங்குட்டுவன் கிள்ளிவளவனுக்குப் போர்த் துணை நல்கி அவனுக்கு முடிசூட்டுவித்தான். 237. புறம். 2 ; அகம். 233 ; சிலப்.23 : 55. 238. பதிற்றுப் பதி. 8. 239. புறம். 39 : 15-16 ; அகம்.396 : 17. |