பக்கம் எண் :

174தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

     சேரர்களின் பரம்பரையில் விளங்கிய மற்றொரு வேந்தன்
ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்பான். குட்டநாட்டின் மேல்
படையெடுத்துவந்தவர்களான சதகன்னர்களை முறியடித்தவன் இவன்.

     செல்வக் கடுங்கோ வாழியாதன் என்ற மற்றொரு சேர மன்னனைப்
பற்றிக் கபிலர் பாடிய பாடல் பதிற்றுப்பத்தில் ஏழாம் பத்தாகச் சேர்க்கப்
பட்டுள்ளது. இவன் மகன் பெயர் பெருஞ்சேரல் இரும்பொறை என்பதாகும்.
தகடூர் என்ற இடத்தில் நிகழ்ந்த பெரியதொரு போரில் சோழ பாண்டிய
மன்னரை முறியடித்து வரலாற்றுப் புகழ்பெற்ற வெற்றி யொன்றைக்
கொண்டான். இவனுடைய போர்த்திறனை வியந்து ‘தகடூர் யாத்திரை’ என்னும்
ஒரு நூலை ஒரு புலவர் பாடினார். இந் நூல் இப்போது மறைந்து விட்டது.
பெருஞ்சேரல் இரும்பொறை தமிழ்ப் புலவர்களைப் பெரிதும் பாராட்டிப்
புரந்தவன்.

     பதிற்றுப்பத்தின் ஒன்பதாம் பத்துத் தலைவன் இளஞ்சேரல்
இரும்பொறை என்பவன். கோப்பெருஞ் சோழனையும், இளம் பழையன்
மாறன் என்ற பாண்டியனையும், விச்சி என்ற குறுநில மன்னன் ஒருவனையும்,
இச் சேர மன்னன் போரில் வென்றான்.240

சோழர்

     சங்க இலக்கியங்களுள் மிகவும் பழையன எனக் கருதப் பெறும்
பாடல்களால் தொகுக்கப்பட்டுள்ள புறநானூற்றில் பல சோழ மன்னர்களைப்
பற்றிய செய்திகள் பொதிந்து கிடக்கின்றன. அவர்களைப் புலவர் பலர்
பாடியுள்ளனர். எனினும், அவர்களைப் பற்றிய வரலாறுகள் ஒன்றும்
திட்டமாகக் கிடைக்கவில்லை. அவர்களுள் தலைசிறந்து விளங்குபவன்
சோழன் கரிகால் பெருவளத்தான் ஆவான். இவன் பொருநராற்றுப்படைக்கும்
பட்டினப்பாலைக்கும் பாட்டுடைத் தலைவனாகக் காட்சி தருகின்றான்.
இவனுடைய தந்தை சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி அழுந்தூர்
வேளிடை மகள் கொண்டான். கரிகாற்சோழன் நாங்கூர் வேளிடை பெண்
கொண்டான்.241 இவனுடைய அம்மான் இருப்பிடர்த்தலையார். இவன்
இளமையில் தீயில் சிக்கி உயிர் பிழைத்தான். முதியோர் இருவர் தம்முள்
மாறுபட்டு வந்து கரிகாலனிடம் வழக்குத் தீர்த்துக்கொள்ள விரும்பினர்.
ஆனால்,

    240. புறம். 200 : 8
    241. தொல். பொருள். அகத். 30 (நச்சர் உரை)