பக்கம் எண் :

176தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

தொழிலை வளர்த்தலில் பழங்காலத் தமிழ்மன்னர்கள் கண்ணுங் கருத்துமாக
இருந்து வந்தனர்.245 ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என்னும்
பேருண்மையை அவர்கள் நன்கு உணர்ந்திருந்தனர். கரிகாலன்
திருவரங்கத்துக்கு மேற்கே பெரியதோர் அணையைக் கட்டிப் பல
கால்வாய்களின் மூலம் காவிரித் தண்ணீரை உழவுக்குத் திருப்பிவிட்டான். அக்
கால்வாய்களுள் மிகவும் பெரியது இப்போது வெண்ணாறு என்று
வழங்குகின்றது. தஞ்சை மாவட்டத்துக்குச் செழுமையை வழங்குவது அவ்வாறு
தான். கரிகாலன் ஆட்சியில் மேலும் பல ஆக்கப் பணிகள்
மேற்கொள்ளப்பட்டன. உள்நாட்டு அயல்நாட்டு வாணிகங்கள் செழிப்புடன்
நடைபெற்று வந்தன. இசையும் கூத்தும் வளர்ந்தன. சமணப்பள்ளிகள் பலவும்,
பௌத்தப் பள்ளிகள் பலவும் பூம்புகாரில் பூசல்கள் ஏதும் இன்றி நடைபெற்று
வந்தன.246

     சோழநாட்டில் அரசுரிமைப் போர்கள் நடைபெற்றன. சேட்சென்னி
என்ற நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்கும் அரசுரிமைப் போராட்டம்
நெடுநாள் நீடித்து வந்தது. நெடுங்கிள்ளி ஆவூர்க் கோட்டைக்குள்ளிருந்து
போர் செய்து கொண்டிருந்தான். நலங்கிள்ளியின் தம்பியான மாவளத்தான்
என்பவன் அக் கோட்டையை முற்றுகையிட்டிருந்தான். முற்றுகை
அகலவுமில்லை; நெடுங்கிள்ளி பணிந்து வரவுமில்லை. கோட்டைக்குள்
குழந்தைகள் பாலின்றிப் பசியால் அரற்றின. சூடுவதற்கு மலர்கள் இன்றிப்
பெண்கள் வெறுங்கூந்தல் முடித்தனர். மக்கள் குடிக்கவும் தண்ணீரின்றித்
தவித்தனர். கோவூர்கிழார் என்ற புலவர் இத் துன்பங்களைக் கண்ணுற்று
உளமுடைந்தார். மக்கள் பட்ட இன்னல்களை அவர் நெடுங்கிள்ளிக்கு
எடுத்துக் காட்டி, ‘நீ அறமுடையவனாயின் கோட்டை வாயிலைத் திறந்துவிடு.
மறம் உடையவனாயின் போர் செய்’ என்று இடித்துக் கூறினார்.247 மன்னன்
அவருடைய அறவுரைக்கு இணங்கவில்லை. எனவே, அவர் நலங்கிள்ளியையும்
ஒருங்கே விளித்து, ‘நீங்கள் இருவரும் ஒரே குலத்தினர். உங்களுக்குள்
ஒருவர் தோற்றாலும், தோல்வி என்னவோ சோழர் குலத்துக்குத்தானே.
நீங்களோ வெற்றியடைவது என்பது முடியாது. ஆகவே, இப் போரைக்
கைவிடுங்கள்’ என்று அறிவுறுத்தினார். வேறொரு சமயம், இளந்தத்தன் என்ற
புலவர் ஒருவரைப் பகையொற்றன் என்று ஐயுற்ற நலங்கிள்ளி அவரைக்
கொல்ல முயன்றான். அப்போது கோவூர்கிழார் இவ்விக்கட்டில்

    245. பட்டினப். 205.
    246. பட்டினப். 53.
    247. புறம். 44.
    248. புறம். 47.