பக்கம் எண் :

பண்டைத் தமிழரின் வாழ்க்கை 177

குறுக்கிட்டு உண்மையை விளக்கி அப் புலவரைக் காப்பாற்றி விட்டார்.248

     கிள்ளிவளவன் நாட்டில் பல தீநிமித்தங்கள் தோன்றின. எரிகொள்ளிகள்
வானத்திலிருந்து எட்டுத் திசைகளிலும் கீழே விழுந்தன. மரங்கள் பற்றி
எரிந்தன. அச்சந்தரக்கூடிய பறவைகள் கூவின. பற்கள் உதிர்ந்து கீழே
கொட்டுவது போலவும், தலையில் எண்ணெய் தேய்த்துக் கொள்ளுவது
போலவும், பன்றிமேல் ஏறுவது போலவும், உடுத்தின ஆடையைக் களைவது
போலவும், படைக்கலங்கள் கழன்று விழுவது போலவும் மக்கள் பல
தீக்கனவுகள் கண்டனர். இத்தனை தீய குறிகளையும் பொருட்படுத்தாதவனாய்
மன்னன் போர்க்கோலங்கொண்டான். அவனுடைய அறியாமையை
எடுத்துக்கூறிக் கோவூர்கிழார் அவனுடைய போர் முனைப்பைத் தணிக்க
முயன்றார்.249

     சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, சோழன் இலவந்திகைப்
பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி, சோழன் குராப்பள்ளித் துஞ்சிய
கிள்ளிவளவன், சோழன் குராப் பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்,
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், சோழன் நெய்தலங்கானல்
இளஞ்சேட் சென்னி, சோழன் போர்வைக் கோப்பெருநற்கிள்ளி எனப் பல
சோழ மன்னர்கள் சங்ககாலத்தில் அரசு புரிந்து புலவர் பெருமக்களின்
பாக்களில் புகழுடம்பு பெற்றுள்ளனர். இச் சோழ வேந்தர் அனைவரினும்
மேலான புகழ் மாலைகளைப் பெற்று விளங்குபவன் சோழன்
கோச்செங்கணான் என்பவன். இவன் திருப்போர் என்ற இடத்தில் சேரன்
கணைக்கால் இரும்பொறையை வென்று புறங்காட்டச் செய்தான். அவனைச்
சிறை செய்து குடவாயிற் கோட்டத்துச் சிறையில் அடைத்துவைத்தான். சேர
மன்னனுக்கு ஒரு சமயம் நீர்வேட்கை ஏற்படவே காவலாளரைத் தண்ணீர்
கேட்டான். அவர்கள் காலந் தாழ்த்துத் தண்ணீர் கொணர்ந்தனர். சேரன்
அதை ஏற்றுக்கொள்ள மறுத்து, ‘மன்னர்கள் குலத்தில் ஆண் குழந்தை
இறந்து பிறந்தாலும், ஊன் பிண்டம் ஒன்று பிறந்தாலும், அதைப் பிறந்தவாறே
மண்ணில் அடக்கம் செய்வது மன்னர் அறத்துக்கு இழுக்காதலால் அதை ஒரு
வாளினால் பிறந்த பிறகே அடக்கம் செய்வர்’250 என்னும் பொருள்பட ஒரு
பாடலை இயற்றித் தன் மானமுடைமையைப் புலப்படுத்தினான். அவனுடைய
நண்பரான பொய்கையார் என்ற புலவர் ‘களவழி நாற்பது’ என்னும்

     248. புறம். 47.
     249. புறம். 41
     250. புறம். 74.