பக்கம் எண் :

178தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

அரியதொரு நூலைப் பாடிச் சோழனை மகிழ்வித்துச் சேர மன்னனைச்
சிறையினின்றும் மீட்டார். இப் போர் கழுமலம் என்ற இடத்தில்
நடைபெற்றதாக இந்நூல் தெரிவிக்கின்றது. இது பதினெண்கீழ்க்கணக்கு
நூல்களுள் ஒன்றாகத் தொகுக்கப்பட்டுள்ளது.

     சோழன் செங்கணான் மிகவும் சிறந்த சிவத்தொண்டன். இவன்
‘எண்தோள் ஈசற்கு எழில் மாடம் எழுபது செய்து’ உலகம் ஆண்டதாகத்
திருமங்கையாழ்வார் பாடுகின்றார்.251 இவன் வைணவக் கோயில்களும்
எடுப்பித்தான். சுந்தரர் பாடிய திருத்தொண்டத் தொகையில் நாயன்மார்
வரிசையிலே கோச்செங்கணானும் சேர்க்கப்பட்டிருப்பது அவனுடைய
பெருமையை எடுத்துக்காட்டுகின்றது.

பாண்டிய மன்னர்

     சங்ககாலப் பாண்டிய மன்னர்களுள் காலத்தால் மிகவும் முற்பட்டவன்
வடிம்பலம்ப நின்ற பாண்டியன் என்பான். இவனுடைய அரசவையிற்றான்
தொல்காப்பியம் அரங்கேற்றப் பட்டது என்று நச்சினார்க்கினியர் கூறுவார்.252
இவன் முடிசூடிக் கொண்டு நெடுங்காலம் ஆண்டு வந்தான் எனத்
தெரிகின்றது. ‘நெடியோன்’ என்று இவனைச் சங்க நூல்கள் பாராட்டு
கின்றன.253 இவன் வழியில் வந்தவன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி
என்பவன். இவனை வேள்விக்குடிச் செப்பேடுகள், ‘கொல்யானை பலவோட்டிக்
கூடாமன்னர் குழாந் தவிர்த்த-பல்யாக (சாலை) முதுகுடுமிப் பெருவழுதியெனும்
பாண்டியாதிராசன்’ என்று புகழ்ந்துரைக்கின்றன. சங்கநூல் தரும் செய்தி
செப்பேடுகளினால் சான்று பெறுவது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. இப் பாண்டிய
மன்னன் வேதியருக்குப் பல யாகசாலைகள் அமைத்துக் கொடுத்தான் என்றும்,
இவனே பல வேள்விகளைச் செய்வித்தான் என்றும் கூறுவர்.254

     சங்ககாலப் பாண்டியருள் சிறந்து விளங்கிய மற்றொருவன்
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் என்பவன்,
மதுரைக்காஞ்சிக்கும் நெடுநல்வாடைக்கும் இவனே பாட்டுடைத் தலைவனாகக்
காட்சியளிக்கின்றான். நெடுஞ்செழியன் மிக இளமையிலேயே அரசுகட்டில்
ஏறினான். சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும், சேரமான்

     251. நா. திவ். பிர. 1505.
     252. தொல். பாயி. உரை (நச்சி)
     253. மதுரைக். 60-61.
     254. புறம். 6, 9, 12, 15, 64.