பக்கம் எண் :

பண்டைத் தமிழரின் வாழ்க்கை 179

யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையும், திதியன், எழினி,
எருமையூரன், இருங்கோவேண்மான், பொருநன் என்னும் வேளிர் ஐவரும்
ஒன்றுகூடி மதுரையின்மேல் படையெடுத்தனர் ; நகரை முற்றுகையிட்டனர்.
பாண்டியன் வீரத்துடன் போராடி மதுரையை விடுவித்துக் கொண்டதுமன்றிப்
பகைவரைத் துரத்திக்கொண்டுவந்து தலையாலங்கானம் என்ற இடத்தில்
அவர்கள் அனைவரையும் ஒருங்கே முறியடித்தான்.255 சேர மன்னனைச்
சிறைபிடித்துப் பாண்டிநாட்டுச் சிறையில் அடைத்து வைத்தான். எவ்வி என்ற
வேளிர் மன்னனுடைய மிழலைக் கூற்றத்தையும், முத்தூற்றுக் கூற்றத்தையும்
கைப்பற்றித் தன் நாட்டுடன் இணைத்துக்கொண்டான். இப் பாண்டியன் தானே
புலமை சான்றவனாக விளங்கினான். கல்வி கற்றலின் பெருமையையும்
சிறப்பையும் வியந்து கூறும் இவனுடைய பாடல் ஒன்று புறநானூற்றில்
சேர்க்கப்பட்டுள்ளது.256 ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்பானும்,
கண்ணகி வழக்கில் அறம்பிழைத்து உயிர் நீத்தவனும் இம் மன்னனேயாவான்
என்று நினைப்பதற்கு இடமுண்டா? தலையாலங்கானத்துப் போரில் இந்
நெடுஞ்செழியன் பெற்ற மாபெரும் வெற்றியை மூன்றாம் இராசசிம்ம
பாண்டியனுடைய சின்னமனூர்ச் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன.

     பாண்டியன் கானப்பேர் கடந்த உக்கிரப் பெருவழுதி என்ற மன்னன்
கடைச்சங்கப் பாண்டிய மன்னருள் இறுதியாய் வாழ்ந்தவனாவான். இவன் தன்
பகைவன் வேங்கை மார்பனை வென்று அவனுடைய கானப்பேரரணைக்
கைப்பற்றினான்.257 மாவெண்கோ என்ற சேர மன்னனுடனும், இராசசூயம்
வேட்ட பெருநற்கிள்ளி என்ற சோழனுடனும் நட்புப் பூண்டிருந்தான்.258
இவனே சிறந்த புலவனாக விளங்கினான். திருக்குறளைப் பாராட்டும் வெண்பா
ஒன்று இவன் பேரால் காணப்படுகின்றது.259 எட்டுத் தொகையுள்
அகநானூற்றைத் தொகுப்பித்தவன் இம் மன்னனே யாவான். இவனுடைய
அரசவையிற்றான் திருக்குறள் அரங்கேற்றம் செய்யப்பட்டதாகக்
கருதுகின்றனர். இவனைப் பற்றிய குறிப்புகள் இறையனார் அகப்பொருள்
உரையிலும், சிலப்பதிகார உரையிலும் காணப்படுகின்றன. இவனை ஐயூர்
மூலங்கிழாரும்,260 ஒளவையாரும்261 பாடியுள்ளனர். இவன் பாடியதாகக்
கொள்ளப்படும் பாட்டு

     255. புறம். 19, 23 ; நற்றி. 387.
     256. புறம். 183.
     257. புறம். 21.
     258. புறம். 367.
     259. திருவள். மாலை. 4.
     260. புறம். 21.
     261. புறம். 367