பக்கம் எண் :

392தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

புக்கன் மகன் இரண்டாம் குமார கம்பணன் ஆவான். வழியில் இவன்
சம்புவராயர்களை வென்று அவர்களுடைய ஒத்துழைப்பையும்
படைத்துணையையும் பெற்றான். இவனுடைய புகழ்பெற்ற மதுரை
முற்றுகையையும், இவன் பெற்ற வீர வெற்றிகளையும் இவனுடைய
மனைவியான கங்காதேவி என்பவள் ‘மதுரை விசயம்’ என்னும் தன்னுடைய
சமஸ்கிருத நூலில் மிகவும் விளக்கமாகத் தீட்டியுள்ளாள். பாண்டிய மன்னர்கள்
செய்யத் தவறிய மிகப்பெரிய சாதனை யொன்றைக் கம்பணன் செய்து
காட்டினான். மதுரையானது கி.பி.1365-70 ஆண்டுகளில் கம்பணன் கைக்கு
மாறிற்று. சுல்தான் ஆட்சியும் அழிந்து மறைந்தது. முஸ்லிம்களுக்கு அஞ்சி
ஒளித்து வைக்கப்பட்டிருந்த அரங்கநாதனின் திருவுருவச் சிலையும் மீண்டும்
கோயிலில் அமைக்கப்பட்டது (கி.பி.1371). குமார கம்பணன் மேற்கொண்ட
முயற்சிகளை இரண்டாம் ஹரிஹரன் (கி.பி.1376-1404) முற்றுவித்தான்.
அம்மன்னன் சைவம், வைணவம், சமணம் ஆகிய சமயங்களின் வளர்ச்சிக்குப்
பெரிதும் துணைபுரிந்தான். திருக்காளத்தி, திருப்பருப்பதம், சிதம்பரம்,
அகோபிலம், திருப்பதி, திருவரங்கம் ஆகிய ஊர்க்கோயில்களுக்கு
நன்கொடைகள் வாரி வழங்கினான். பதினான்காம் நூற்றாண்டின் இறுதியில்
விசயநகரப் பேரரசானது தென்னிந்தியாவில் மிகப் பெரிய பேரரசாக
நிலைப்பட்டுவிட்டது. அப்பேரரசின் மாகாணங்களுள் ஒன்றான இராச கம்பீர
இராச்சியத்தின் சிறு பகுதிகளாகச் சோழ நாடும், பாண்டி நாடும், கொங்கு
தேசமும் ஒடுங்கிவிட்டன.

     விசயநகரப் பேரரசு சிறிது காலம் வடநாட்டு மன்னரின்
தாக்குதல்களிலிருந்து தென்னிந்தியாவுக்குப் பாதுகாப்பளித்து வந்தது.
விசயநகரப் பேரரசன் இரண்டாம் தேவராயன் இறந்ததும் ஒட்டநாட்டு
(கலிங்கத்து) மன்னன் கபிலேசுவர கஜபதி என்பவன் தென்னிந்தியாவின்மேல்
படையெடுத்தான். முதன்முதல் அவன் விசயநகரத்தை முற்றுகையிட்டான்.
முற்றுகை முறிந்துவிட்டதாகையால் அதைக் கைவிட்டுத் தன் நாடுதிரும்பினான்.
எனினும் அவன் தளராமல் அண்டை நாடுகளின்மேல் மீண்டும் மீண்டும்
படையெடுத்துக்கொண்டே யிருந்தான். படிப்படியாக விசயநகரப் பேரரசின் பல
இடங்களையும் கைப்பற்றி இறுதியில் காஞ்சிபுரத்தையும்
திருச்சிராப்பள்ளியையும் பிடித்துக்கொண்டான் (கி.பி. 1463). காவேரியின்
வடகரை வரையில் ஒட்டரின் ஆதிக்கம் விரிந்து நின்றது. வடக்கே தெலுங்கு
நாடானது ஒட்டரின் ஆட்சிக்குள் நிலைத்துவிட்டது. ஆனால், தமிழகம்
ஒட்டரின் பிடியிலிருந்து நழுவிவிட்டது. விசயநகரப் பேரரசன்
மல்லிகார்ச்சுனன் பெயரளவில் தமிழகத்தின்