பக்கம் எண் :

394தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

புரிந்து, கி.பி. 1509-ல் உயிர் துறந்தான். அவன் இராமேசுரம், திருவரங்கம்,
கும்பகோணம், சிதம்பரம், திருக்காளத்தி முதலிய ஊர்க் கோயில்களுக்குத்
தானங்கள் வழங்கியுள்ளான். அவனுக்குப் பின்பு அவன் தம்பி கிருஷ்ணதேவ
ராயன் பட்டத்துக்கு வந்தான் (கி.பி. 1509). அரசியலிலும், ஆட்சித்
துறையிலும், போர்த் திறனிலும் கிருஷ்ணதேவ ராயன் சிறப்புற்று
விளங்கினான். இப் பேரரசன் கலைவளர்ச்சியிலும், சமயப் பணிகளிலும்
பெரிதும் ஈடுபட்டிருந்தான். இவன் காலத்தில் வைணவம் வளர்ந்து வந்தது.
எனினும், சைவத்தையும் இவன் போற்றி வந்தான். கோயில்களுக்கும்
பிராமணருக்கும் அளவற்ற கொடைகள் வழங்கினான். சிதம்பரம் கோயிலின்
வடபுறத்துக் கோபுரத்தை எழுப்பிப் பேரும் புகழும் பெற்றான்.

     கிருஷ்ணதேவராயன் கி.பி. 1529-ல் இறந்தான். நாட்டில் மீண்டும்
அரசியல் குழப்பங்கள் எழுந்தன. அவற்றின் விளைவாகக் கிருஷ்ணதேவ
ராயனின் தம்பி அச்சுதராயன் விசயநகரப் பேரரசனாக அரியணை யேறினான்
(கி.பி. 1530). இடையறாத அரசியல் கிளர்ச்சிகளையும், போராட்டங்களையும்
இவன் எதிர்த்து நீந்த வேண்டிய நிலையிலிருந்தான். சாளுவ நரசிம்மனுடனும்,
ஏனைய முடிமன்னருடனும் மேற்கொண்ட போர்களில் நாகம நாயக்கன் மகன்
விசுவநாத நாயக்கன், இவனுக்கு உறுதுணையாக நின்றான். அவனுடைய
உதவிக்குப் பரிசாக அவனிடம் பாண்டிநாட்டு ஆட்சிப் பொறுப்புகள்
ஒப்படைக்கப் பட்டன. அவன் விசயநகரத்துப் பிரதிநிதியாக மதுரையில்
அமர்ந்திருந்து கி.பி. 1533 முதல் அச்சுதன் இறந்த ஆண்டாகிய கி.பி. 1542
வரையில் அரசாண்டு வந்தான். அச்சுதராயனுக்குப் பின்பு வழக்கம்போல்
மீண்டும் நாட்டில் குழப்பங்களும் கிளர்ச்சிகளும் நேர்ந்தன. இக்
குழப்பங்களை வென்று சதாசிவராயன் விசயநகரப் பேரரசனானான்.
இவனுடைய உட்பகைவர்கள் இவனை எதிர்த்துக் கிளர்ச்சிகள் செய்தார்கள்.
தமிழகத்திலும் குழப்பங்கள் மேலிட்டன.

     இந் நிலையில் தென்னிந்தியாவில் கிறித்தவப் பாதிரிமார் நுழைந்து பல
இந்துக்களை மத மாற்றம் செய்வித்துத் தம் சமயத்தை வளர்க்கும் பணியில்
முனைப்புடன் ஈடுபடலானார்கள். செயின்ட் பிரான்சிஸ் சேவியர் என்ற
கத்தோலிக்கப் பாதிரியின் தலைமையில் தென்பாண்டி நாட்டில் கிறித்தவ
சமயம் பல இடங்களிலும் பரவலாயிற்று. முத்துக்குளியல் துறையில் எண்ணற்ற
பரவர்கள் (மீனவர்கள்) கிறித்தவர்களாக மாறி ஞானஸ்நானம்’ பெற்றார்கள்.
இவர்கள் போர்ச்சுகீசிய மன்னனுடைய