குடிமக்களாக மாறி, அவனுடைய ஆணைக்கு உட்பட வேண்டுமென்றும், இவர்கள் அப்படி உட்படுவார்களாயின் முஸ்லிம் கொடுமைகளினின்றும் இவர்களைத் தாம் பாதுகாத்து வருவதாயும் கூறிப் பாதிரிகள் இவர்களுக்கு ஆசை காட்டினார்கள். பிரான்சிஸ்கன் பண்டாரங்களும் ஜெசூட் மதவெறியரும் கடற்கரை ஓரங்களில் இருந்த இந்துக் கோயில்களை இடித்து நிரவினர். அக் கோயில்கள் நின்ற இடங்களில் கிறித்தவ ஆலயங்களை எழுப்பினர். அதைவிட மாபெரும் கொடுமைகளைச் செய்யவும் அவர்கள் திட்டமிட்டனர். காஞ்சிபுரத்துக் கோயில்களை இடித்துத் தவிடு பொடியாக்கவும், அவற்றில் இருந்த பொக்கிஷத்தைச் சூறையாடவும் ஒரு சூழ்ச்சி உருவாகி நிறைவேறும் நிலையில் இருந்தது. அதற்குள் அவர்கள் நாகூரில் இருந்த அரங்கநாதர் ஆலயம் ஒன்றை நிரவினார்கள். தக்க சமயத்தில் விசயநகரப் பேரரசின் படைகள் சின்ன திம்மா தலைமையில் சோழ நாட்டில் புகுந்து புவனகிரியைக் கைப்பற்றின; உடனே நாகூருக்குச் சென்று கிறித்தவப் பாதிரிகளால் சீரழிக்கப்பட்ட கோயிலைப் பழுதுபார்த்து மீண்டும் எழுப்பிக் கொடுத்தன. விசயநகரப் படைகள் அஃதுடன் அமையவில்லை. அவை காவிரியாற்றைக் கடந்து தஞ்சாவூர், புதுக்கோட்டை முதலிய இடங்களைக் கைப்பற்றிக் குறுநிலத் தலைவர்களை வென்று அவர்களிடம் திறை கவர்ந்தன. அரசிழந்து நின்ற தென்பாண்டி மன்னன் அரியணை ஏற்றப் பெற்றான். போர்ச்சுகீசியரின் தொல்லைகள் நாளுக்குநாள் வளர்ந்து கொண்டே போயின. கிருஷ்ணதேவ ராயனின் மருமகனான இராமராயனின் தலைமையில் விசயநகரப் படைகள், தென்னாடு வந்து சென்னையில் உள்ள சாந்தோம் மாதாகோயிலின்மேல் திடீரென தாக்கின (கி.பி. 1558). அங்கிருந்த கிறித்தவர்கள் இராமராயனுக்கு 1,00,000 வராகன் பொன் செலுத்திச் சமாதானத்தை விலைக்கு வாங்கினர். இந்த இராமராயன் அரவீடு பரம்பரையில் வந்தவன்; கிருஷ்ணதேவ ராயன் இறந்தவுடனே அவனுடைய சிசுவின் பெயரால் அரசாட்சியைக் கைப்பற்ற முனைந்தான்; ஆனால், அம் முயற்சியில் அவன் தோல்வியுண்டான். எனினும் அச்சுதராயன் அரசாட்சியுமைகளை இராமராயனுடன் பகிர்ந்து கொள்ள ஒருப்பட்டான். இராமராயனோ செய்த நன்றியை மறந்தான். அவன் அச்சுதராயனுக்கு எதிராகத் தோன்றிய அரசியல் கிளர்ச்சிகள் யாவற்றிலும் பங்குகொண்டான். பல அரசியல் சூழ்ச்சிகள், பல கலகங்கள், பல போர்கள் ஆகியவற்றின் காரணமாக நாடெங்கும் குருதியாறு பாய்ந்தது. |