பக்கம் எண் :

396தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

கிருஷ்ணதேவ ராயனின் தம்பி மகனான சதாசிவராயனை இராமராயன்
அரியணையில் ஏற்றினான். அரியணையில் அமர்ந்திருந்தவன் சதாசிவன்;
ஆனால், அரசாட்சி புரிந்தவன் இராமராயன்.

     விசயநகரத்தின் வீழ்ச்சிக்கு காரணமான தலைக்கோட்டைப் போரில்
(கி.பி. 1565) இராமராயன் ஐந்து சுல்தான்களை ஒருங்கே எதிர்த்துப்
போராடினான். அவனிடம் படைத்தலைவர்களாகப் பணியாற்றிய இரு
முஸ்லிம்கள் தத்தம் ஆணையின்கீழ்ப் பணியாற்றிய எண்பதினாயிரம்
படைவீரர்களுடன் பகைவர்களான சுல்தான்களுடன் சேர்ந்துகொண்டனர்.
இவர்களுடைய நம்பிக்கைத் துரோகத்தினால் இராமராயன் தோல்பியுற்றுப்
பகைவர்களின் கைகளில் கொலையுண்டிறந்தான். விசயநகரப் பேரரசின்
படைவீரர்கள் ஒரு நூறாயிரவரைச் சுல்தான்கள் படுகொலை செய்தார்கள்;
விசயநகரத்தை இடித்தும் எரியூட்டியும் அழித்தார்கள். முஸ்லிம்களின்
கைகளில் அன்று பாழடைந்த விசயநகரமானது இன்றளவும் ஒரு பாழ்
நகரமாகவே நின்று, காண்போர் கண்களைக் கலங்கவைத்து வருகின்றது.

     தலைக்கோட்டைப் போரைத் தொடர்ந்து நேரிட்ட பெருங்
குழப்பத்தின்போது தமிழகத்தில் மதுரையிலும், தஞ்சாவூரிலும், செஞ்சியிலும்
விசயநகரப் பேரரசின் சார்பில் அரசுபுரிந்து வந்த நாயக்கர்கள் தனித்தனித்
தத்தம் நாட்டு மன்னர்களாக முடிசூட்டிக் கொண்டனர். ஆயினும், வேலூர்
நாயக்கர்களும், மைசூர் உடையார்களும் தொடர்ந்து விசயநகரத்து மன்னரின்
தலைமையை ஏற்றுவந்தனர். விசயநகர அரசானது அரவீடு பரம்பரை
மன்னர்களின்கீழ், கி.பி. 1675 வரையில் தொடர்ந்து செயல்பட்டு வந்தது.

வேலூர் நாயக்கர்

     வேலூரில் சின்னபொம்ம நாயக்கன் விசயநகர அரசின்கீழ்க் கி.பி. 1582-
ஆம் ஆண்டுவரையில் அரசாண்டான். வேலூர்க் கோட்டையும் அதனுள்
வழிபாடற்று மங்கிக்கிடக்கும் ‘சலகண்டேசுரர்’ கோயிலையும் கட்டியவன் இந்
நாயக்கன்றான். அடைய புலம் அப்பைய தீட்சிதரின் புலமையைப் பாராட்டி
அவருக்குச் சின்னபொம்ம நாயக்கன் கனகாபிடேகம் செய்தான். அவர்
அப்பொன்னைக் கொண்டு தன் ஊரில் கோயில் ஒன்றை எழுப்பினார்.

செஞ்சி நாயக்கர்கள்

     விசயநகரப் பேரரசின்கீழ்ச் செஞ்சியானது படைபலத்திலும்,
அரசாதிக்கத்திலும் உயர்ந்ததொரு நிலையை எட்டியிருந்தது.