பக்கம் எண் :

மதுரை நாயக்கர்கள் 409

துரோகம் விளைத்தது. செஞ்சி முற்றுகை மேலும் வலுவடைந்தது. பெரிதும்
ஏமாற்றமடைந்த மதுரை நாயக்கன் மீர்ஜு ம்லாவுடன் உடன்படிக்கை
யொன்றைச் செய்துகொண்டு, அவன் முற்றுகையைக் கைவிடும்படியான
ஏற்பாடுகளில் முனைந்தான். ஆனால், பீஜப்பூர்ச் சேனைகள் செஞ்சியைக்
கைப்பற்றிக் கொண்டன. அவை அங்கிருந்தும் முன்னேறிச் சென்று
தஞ்சாவூரையும் மதுரையையும் தாக்குவதற்கு முயற்சிகள் மேற்கொண்டன.
திருமலை நாயக்கன் இராமநாதபுரத்துக் கள்ளரின் உதவியைக்கொண்டு அச்
சேனைகளை மீண்டும் செஞ்சிக்கே பின்னடையும்படி செய்தான்.

தஞ்சாவூர் நாயக்கர்கள்

     தஞ்சாவூர் இரகுநாத நாயக்கன் தளர்ந்த தன் எண்பதாம் வயதில் இம்
மண்ணுலகை நீத்தான் (1640). தன் வாணாளில் அவன் மாபெரும் வீரனாகத்
திகழ்ந்தவன். வடமொழியில் பல நூல்களை அவன் இயற்றியுள்ளான்.
வடமொழிப் புலவர்கள் பலர் அவனுடைய அரசவையை அணிசெய்தனர்.
கோவிந்த தீட்சிதர், எக்ஞிய நாராயண தீட்சிதர், இராமபத்திராம்பா,
மதுரவாணி, வேங்கிடேசுரமகி ஆகியவர்கள் அவர்களுள் சிலர்; இவன்
தரங்கம்பாடியில் டேனிஷ் வணிகருக்குக் குடியேற்ற வசதிகளைச் செய்து
கொடுத்தான் (1640).

     இரகுநாத நாயக்கனின் மகன் விசயராகவ நாயக்கன் அளவு கடந்த
சமயப் பற்றும், பொருளற்ற சடங்குகளில் பெரும்பித்தும் கொண்டான்.
கிறித்தவ ஜெசூட்பாதிரிகள் அவனுடைய கண்மூடிப் பழக்கங்களைக் கண்டு
எள்ளி நகையாடி எழுதி வைத்துப் போயுள்ளனர். விசயராகவன் ஒரு கோழை;
எதிரிகளைக் கண்டு நடுங்கிப் புறமுதுகிட்டு ஓடுபவன்; மருட்சியும் மனத்
தடுமாற்றமும் உடையவன். கோல்கொண்டாவின் குதிரைப்படைகள்
தஞ்சாவூரின் எல்லையை எட்டியபோது அவன் நடுநடுங்கினான். இரவு
முழுவதும் இருட்டில் ஒளிந்திருந்து காலங்கழித்தான். குடிமக்கள் பயத்தினால்
தெருக்களில் ஓடி நெருக்குண்டு மாண்டனர். விடிந்து பார்த்தபோது
மன்னனின் அச்சத்துக்குக் காரணம் ஏதும் இல்லை என்று புலனாயிற்று.
தஞ்சாவூரை நோக்கி வந்த ஐந்நூறு குதிரைக்காரர்கள் நகரை
முற்றகையிடாமலே பொழுது புலர்வதற்குள் நகர்ப்புறத்தைவிட்டே
ஓடிவிட்டார்கள். அவனுடைய கோழைத்தனத்தைப்பற்றிக் கிறித்தவப்
பாதிரிமார்கள் திரித்துவிட்ட கதைகள் பல. விசயராகவன் ஆட்சியில்
தஞ்சாவூர்ச் சீமை அளவற்ற துன்பத்துக்கும், பொருள் இழப்புக்கும் உட்பட்டு