வேறு சில ஓவியங்கள்
திருநெல்வேலி மாவட்டம்
திருமலைபுரத்தில் உள்ள
குகைக்கோயிலிலும் பழைய சுவர் ஓவியங்கள்
காணப்படுகின்றன. இவற்றைக்
கண்டுபிடித்தவரும் ழூவோ தூப்ராய் அவர்களே. இங்குள்ள
ஓவியங்கள்
காலப் பழைமையால் பெரிதும் ஒளி மழுங்கி யிருப்பதோடு, அழிந்தும்
சிதைந்தும் உள்ளன. மத்தளம் வாசிப்பவள் உருவம், ஆண்பெண்
உருவங்கள், இலைக்கொடி,
பூக்கொடி, வாத்து இவைகளின் ஓவியங்கள்
சிதைந்தும் அழிந்தும் காணப்படுகின்றன.
மலையடிப்பட்டி குகைக்
கோயிலிலும் பழைய காலத்து ஓவியங்கள் காணப்படுகின்றன.
இவையும்
காலப்பழைமையால் மழுங்கி மறைந்து விட்டன
தஞ்சைக் கோயில் ஓவியம்
கி.பி.11ஆம் நூற்றாண்டின்
தொடக்கத்திலே இராஜராஜ சோழனால்
அமைக்கப்பட்டது தஞ்சாவூர்ப்
பெரியகோயில் என வழங்குகிற
இராஜராஜேச்சுரம். இக்கோயிலில் இராஜராஜன்
காலத்திலேயே எழுதப்பட்ட
சோழர் காலத்து ஓவியங்கள உள்ளன. இந்த ஓவியங்கள்
நெடுங்காலமாக
மறைந்திருந்தன; இல்லை,
மறைக்கப்பட்டிருந்தன.
சோழர் காலத்தில், கி.பி.11ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இந்தச்
சித்திரத்தின்
மேலே, கி.பி.17ஆம் நூற்றாண்டிலே தஞ்சையை அரசாண்ட
நாயக்க மன்னர்கள்
(இவர்கள், விஜயநகர அரசருக்குக் கீழடங்கி அரசாண்ட
தெலுங்கர்கள்), வேறு புதிய
ஓவியத்தை எழுதி மறைத்துவிட்டார்கள். புதிய
ஓவியத்தின் கீழே இருந்த சோழர்
காலத்துச் சித்திரம் நெடுங்காலம்
மறைக்கப்பட்டிருந்தது. மறைக்கப்பட்டிருந்த சோழர்
காலத்துச்
சித்திரங்களைக் கண்டுபிடித்தவர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்
பேராசிரியராக இருந்த காலஞ்சென்ற திரு. S.K. கோவிந்தசாமி அவர்கள்.
|