பக்கம் எண் :

New Page 1

இசைக் கலை

107


   

    கணக்கற்ற பரிபாடல்கள் முற்காலத்தில் இருந்தன என்றும், அவற்றில்
பெரும்பாலும் இப்போது இறந்து பட்டன என்றும் தெரிகின்றது. என்னை?
இறையனார் அகப்பொருள் உரையாசிரியர் தலைச்சங்கத்தைக் கூறுமிடத்தில்,
‘‘அவர்களாற் பாடப்பட்டன எத்துணையோ பரிபாடலும், முதுநாரையும்,
முதுகுருகும், களரியாவிரையுமென இத்தொடக்கத்தன’’ என்று கூறுகிறார்.
பின்னர்க் கடைச்சங்க காலத்தைக் கூறுமிடத்தில், ‘‘அவர்களாற்
பாடப்பட்டன, நெடுந்தொகை நானூறும், குறுந்தொகை நானூறும், நற்றிணை
நானூறும், புறநானூறும், ஐங்குறு நூறும், பதிற்றுப்பத்தும், நூற்றைம்பது
கலியும், எழுபது பரிபாடலும், கூத்தும், வரியும், சிற்றிசையும்,
பேரிசையுமென இத்தொடக்கத்தன’’ என்று எழுதுகிறார்

 

     இவர் கூறிய முதற் சங்க காலத்து ‘‘எத்துணையோ பரிபாடல்களில்’’
இக்காலத்து ஒரு பாடலேனும் எஞ்சி நிற்கவில்லை; கடைச்சங்கத்தார் பாடிய
‘‘எழுபது பரிபாடல்களில்’’ இப்போது உருப்படியாக இருப்பது இருபத்தொரு
பரிபாடல்களே; மற்றவை  அழிந்துவிட்டன.

 

பரிபாடல் இசை மறைவு

 

     இப்போதுள்ள இசைப்புலவர்கள் பரிபாடல்களைப் பாடுவது இல்லை.
அதனை எப்படிப் பாடுவது என்பதையும் இப்போதுள்ளவர் அறியார்
போலும்! இதுபற்றி முத்தமிழ்ப் புலவர், பேராசிரியர் உயர்திரு. விபுலாநந்த
அடிகளார் தமது யாழ்நூல் என்னும் இசைத்தமிழ் நூலிலே இவ்வாறு
கூறுகிறார்.

 

     ‘‘முதலூழி யிறுதிக்கண் கடல்கொண்ட தென் மதுரையகத்துத்
தலைச்சங்கத்து அகத்தியனாரும், இறையனாரும், குமரவேளும், முரஞ்சியூர்
முடிநாகராயரும், நிதியின் கிழவனும் என்றிவருள்ளிட்டோரிருந்து
தமிழாராய்ந்த காலத்திலே, எண்ணிறந்த பரிபாடலும்,