பக்கம் எண் :

இசைக் கலை

115


   

    ‘‘வாழி சோழகுல சேகரன் வகுத்த இசையின்

        மதுர வாரியென லாகுமிசை மாதரிதனால்

    ஏழு பாருலகொ டேழிசை வளர்க்க வுரியான்

        யானை மீதுபிரி யாதுட னிருந்துவரவே’’1

 

     ‘‘தாள முஞ்செல வும்பிழை யாவகை

        தான்வ குத்தன தன்னெதிர் பாடியே

    காள முங்களி றும்பெறும் பாணர்தங்

        கல்வி யிற்பிழை கண்டனன் கேட்கவே’’2

 

     இதனால், இவன் இசைக்கலையை நன்கறிந்தவன் என்பதும்,
இசைக்கலையில் வல்லவரான பாணர்களின் இசையிலும் இவன் பிழை
கண்டவன் என்பதும், இசை நூல ஒன்றை இவன் இயற்றினான் என்பதும்,
இவன் அமைத்த இசை முறைப்படி இசை பாடி இவனிடம் பாணர்கள்பரிசு
பெற்றனர் என்பதும் அறியப்படுகின்றன.

 

இசைத்தமிழ்ச் செய்யுட்டுறைக் கோவை

 

     இப்பெயருள்ள இசைத்தமிழ் நூல் ஒன்று இருந்த தென்பதை,
யாப்பருங்கலக் காரிகை உரைப்பாயிரத்தினால் அறிகிறோம்.
அவ்வுரைப்பாயிரம் வருமாறு:

 

     ‘‘அற்றேல் இந்நூல் (யாப்பருங்கலக் காரிகை) என்ன பெயர்த்தோ
எனின்....இசைத்தமிழ்ச் செய்யுட்டுறைக் கோவையே, உரூபாவதாரத்திற்கு
நீதகச் சுலோகமே போலவும் முதல் நினைப்பு உணர்த்திய இலக்கியத்தாய்ச்
.... செய்யப்பட்டமையான் யாப்பருங்கலக் காரிகை என்னும் பெயர்த்து.’’


1. கலிங்கத்துப் பரணி, அவதாரம், 54 ஆம் தாழிசை.

2. காளிக்குக் கூளி கூறியது, 13ஆம் தாழிசை.