பக்கம் எண் :

128
 128

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்


 

இசையிலும் பக்கவாத்தியமாகப் பயன்படுத்தப்படுகிறது. இக்கருவி
சங்ககாலத்தில் தமிழ் நாட்டில் பயன்படுத்தப்பட்டுப் பிற்காலத்தில்
மறைந்துவிட்டது. இது பற்றிச் சிறிது விளக்குவோம்.

 

     பதலை என்னும் தமிழ்ப் பெயர் தபலா என்று திரிந்து வழங்குகிறது.
 

     சங்க காலத்திலே பாணர் என்று தமிழரில் ஓர் இனத்தார்
இருந்தார்கள். ஆடல், பாடல், நாடகம் என்னும் கலை நிகழ்ச்சிகளை
நிகழ்த்துவது அவர்கள் தொழில். பாணருடைய பெண்மக்களும்
இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். பாணருடைய
பெண்களுக்குப் பாடினி என்றும், விறலி என்றும் பெயர். பாணர் குடும்பமே
இசை, நாடகங்களில் தேர்ச்சி பெற்றிருந்தது. பாணர்கள் குடும்பத்தோடு ஊர்
ஊராகச் சென்று, ஊர்களில் திருவிழா நடக்கும்போது இசைகளையும்
நடனங்களையும் நிகழ்த்தினார்கள். பெயர் பெற்ற பாணர்கள், அரசர்,
சிற்றரசர், பிரபுக்கள் முதலியவர்களிடம் சென்று இசைப்
பாடல்களையும் ஆட்டங்கள், நாடகங்களையும் நிகழ்த்திப் பரிசு பெற்றார்கள்.
அவர்கள் தமது கலை நிகழ்ச்சிகளில் யாழ், குழல், முழவு முதலிய
இசைக்கருவிகளுடன் பதலையையும் வாசித்து வந்தார்கள்.

 

     பிற்காலத்தில் யாழ், வங்கியம் முதலிய இசைக்கருவிகள் வழக்கிழந்து
மறைந்துவிட்டது போலவே பதலையும் தமிழ் நாட்டிலிருந்து மறைந்துவிட்டது.
ஆனால், தபேலா என்னும் பெயருடன் வடநாட்டில் இன்றும் வழங்கி

வருகிறது.