பக்கம் எண் :

இசைக்கலை

129


 

பாணர் இசைக்கலை நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு இசைக்கருவிகள்
எடுத்துக்  கொண்டு போனதை நெடும் பல்லியத்தனார் என்னும் புலவர்
கூறுகிறார்:
 

     ‘‘நல்யாழ் ஆகுளி பதலையொடு சுருக்கிச்

    செல்லா மோதில் சில்வளை விறலி’’      (புறம்: 64:1-2)

 

என்று பாணன் விறலியிடம் கூறியதாக இச்செய்யுள் கூறுகிறது. இதில் யாழ்,
ஆகுளி (சிறுபறை), பதலை என்னும் இசைக்கருவிகள் கூறப்படுவது காண்க.
 

    பாணர்கள் தங்கள் இசைக் கருவிகளைக் காவடிகளின் இரண்டு
புறத்திலும் உள்ள கூடைகளில் வைத்து, தோளின் மேல் காவடியைச்
சுமந்துகொண்டு போனார்கள் என்பதை ஒளவையார் கூறுகின்றார்.

 

     ‘‘ஒருதலைப் பதலை தூங்க ஒருதலைத்

    தூம்பகச் சிறுமுழாத் தூங்கத் தூக்கி’’     (புறம் : 103:1-2)

 

என்று கூறுகின்றார். இதிலும் பதலை என்னும் கருவி கூறுப்படுவது காண்க.
 
     பரணர் என்னும் புலவரும் இதைக் கூறுகின்றார்:

 

     ‘‘பண்ணமை முழுவும் பதலையும் பிறவும்

    கண்ணறுத் தியற்றிய தூம்பொடு சுருக்கிக்

    காவிற் றகைத்த துறைகூடு கலப்பையர்’’

                      (பதிற்றுப் பத்து, 5ஆம் பத்து:1 3-5)

 

இதிலும், பரணர் பதலையைக் கூறுவது காண்க. இரணிய முட்டத்துப்
பெருங்குன்றூர்ப் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் தாம் பாடிய
மலைபடுகடாம் என்னும் செய்யுளில் பாணர்கள் காவடியில் வைத்துத்
தோளில் தூக்கிக் கொண்டு போன இசைக் கருவிகளின் பெயர்களைக்
கூறுகிறார்.