பக்கம் எண் :

இசைக்கலை

131


 

பதலையும் தபலாவும் ஒன்றே. இதில் சிறிதும் சந்தேகம் இல்லை

தபலாவுக்கு ஒரு பக்கம் மட்டும் தோல் மூடிக் கட்டப்பட்டிருப்பது
போலவே பதலையும் ஒரே பக்கம் தோல் மூடிக் கட்டப்பட்டிருந்தது.
இதனைப் ‘பதலை ஒருகண் பையென இயக்குமின்’ என்று
கூறப்படுவதிலிருந்து அறியலாம். மேலும் புறநானூற்றுப் பழைய
உரையாசிரியர் இதைத் தெளிவாக விளக்கிக் கூறியுள்ளார். ‘‘பதலை என்பது,
ஒரு தலை முகமுடையதோர் தோற்கருவி’’ என்று அவ்வுரையாசிரியர் (புறம்:
103ஆம் செய்யுள் உரையில்) சந்தேகத்துக்கு இடமில்லாமல் எழுதியிருப்பது
காணக. இவ்வுரையாசிரியரே புறம் 64ஆம் பாட்டு உரையில், பதலை
என்பதற்கு ஒருதலை மாக்கிணை என்று உரை எழுதியிருப்பதையும்
நோக்குக. நச்சினார்க்கினியர் என்னும் உரையாசிரியரும் ‘நொடி தரு பாணிய

பதலை’ (மலைபடுகடாம்11) என்பதற்கு, ‘‘மாத்திரையைச் சொல்லும்
தாளத்தையுடைய ஒருகண்மாக்கிணை’’ என்று உரை எழுதியிருப்பதையும்
காண்க.

 

     எனவே, பதலை என்பது ஒரு பக்கத்தில் மட்டும் தோல்
போர்க்கப்பட்ட இசைக்கருவி என்பதும், அதைச் சங்க காலத்தில் பாணர்கள்
இசைப்பாட்டுகளுடன் பக்க வாத்தியமாக இசைத்து வந்தார்கள் என்பதும்

தெரிகிறது. இந்த இசைக்கருவி, பிற்காலத்தில் யாழ், வங்கியம்
முதலிய இசைக் கருவிகள் மறைந்துவிட்டது போலவே மறைந்துவிட்டது!
ஆனால், இதே இசைக்கருவி தபலா என்னும் பெயருடன் வடநாடுகளில்
இன்றும் இருந்து வருகிறது. பழைய தமிழ்நாட்டுப் பதலை இப்போது
வடநாட்டுத் தபலாவாகக் காட்சியளிக்கிறது.

 

     இதுபோலவே, பெருவங்கியம் என்னும் மூங்கிலினால் செய்யப்பட்டுத்
தமிழ் நாட்டில் வழங்கி வந்த இசைக்கருவி இப்போது மறைந்துவிட்ட
போதிலும், வடஇந்தியாவில் கிராமிய இசைக்கருவியாக இன்றும் இருந்து
வருகிறது.