144 |
தமிழர் வளர்த்த
அழகுக் கலைகள் |
இந்த ஆடலுக்கு நான்கு உறுப்புகள் உண்டு.
இந்த ஆடலில் உட்கு (அச்சம்), வியப்பு, விழைவு (விருப்பம்),
பொலிவு
(அழகு) என்னும் குறிப்புகள் அமைந்திருக்கும் என்று கூறும் செய்யுளை
நச்சினார்க்கினியர்
தமது உரையில் மேற்கோள் காட்டுகிறார்.1
‘‘கொட்டி யாடற் றோற்றம் ஒட்டிய
உமையவள் ஒருபா லாக ஒருபால்
இமையா நாட்டத்து இறைவன் ஆகி
அமையா உட்கும் வியப்பும் விழைவும்
பொலிவும் பொருந்த நோக்கிய தொக்க
அவுணர் இன்னுயிர் இழக்க அக்களம்
பொலிய ஆடினன் என்ப’’
என்பது அச்செய்யுள்.
சிலப்பதிகாரக் காவியத்தை இயற்றிய இளங்கோவடிகள் தமையனான
சேரன் செங்குட்டுவன், வஞ்சி மாநகரத்திலே, ஆடகமாடம் என்னும்
அரண்மனையின்
நிலாமுற்றத்திலே, மாலை நேரத்திலே தன்னுடைய
தேவியோடு வீற்றிருந்தான். அவ்வமயம்,
கூத்தச் சாக்கையன் என்னும்
நாடகக் கலைஞன், தன் மனைவியுடன் வந்து இருவரும் சிவபெருமான்
உமையவள் போன்று வேடம் புனைந்து, இந்தக் கொட்டிச் சேதம்
என்னும்
ஆடலை ஆடிக் காட்டினான். அதனைச் செங்குட்டுவ மன்னன் தேவியுடன்
கண்டுமகிழ்ந்தான் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.
‘‘திருநிலைச் சேவடிச் சிலம்பு புலம்பவும்
பரிதரு செங்கையில் படுபறை ஆர்ப்பவும்
செஞ்சடை சென்று திசைமுகம் அலம்பவும்
1. கலித்தொகை, கடவுள் வாழ்த்து உரை
|