பக்கம் எண் :

146
146

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்


  

ஆடல் மண்ணால், அல்லது பஞ்சலோகத்தினால் செய்யப்பட்ட குடத்தைக்
கொண்டு ஆடப்படுவது இக்கூத்து.

  

         ‘‘வாணன் பேரூர் மறுகிடை நடந்து

         நீள்நிலம் அளந்தோன் ஆடிய குடம்’’

  

என்பது சிலப்பதிகாரம்.1

  

         ‘‘காமன் மகன் அநிருத்தனைத் தன் மகள் உழை காரணமாக
வாணன் சிறைவைத்தலின், அவனுடைய சோவென்னும் நகர வீதியிற் சென்று
நிலங்கடந்த நீனிற வண்ணன் குடங் கொண்டாடிய குடக்கூத்து’’ என்பது
அடியார்க்கு நல்லார் உரை.

  

         குடக்கூத்துக்கு ஐந்து உறுப்புகள் உண்டு.

  

         5. பாண்டரங்கம்: சிவபெருமான், திரிபுரத்தை எரித்துச்
சாம்பலாக்கிய பின்னர், தேர்ப்பாகனாக இருந்த நான்முகன் காணும்படி
ஆடியது இப்பாண்டரங்கம் என்னும் கூத்து.(சிவபெருமான், கொடுகொட்டி
என்னும் கூத்தையாடியது, திரிபுரம் தீப்பிடித்து

எரிந்துகொண்டிருக்கும் போது இப்பாண்டரங்கக் கூத்து, அது எரிந்து
சாம்பலான பிறகு ஆடியது.)

  

         ‘‘தேர்முன் நின்ற திசைமுகன் காணப்

        பாரதி யாடிய வியன்பாண் டரங்கமும்’’

  

என்பது சிலப்பதிகாரம்.2

  

         ‘‘வானோராகிய தேரில் நான்மறைக் கடும்பரி பூட்டி நெடும்புறம்
மறைத்து வார்துகில் முடித்துக் கூர்முட்பிடித்துத் தேர்முன் நின்ற திசைமுகன்
காணும்படி பாரதி வடிவாய இறைவன் வெண்ணீற்றை அணிந்தாடிய
பாண்டரங்கக் கூத்து’’ என்பது அடியார்க்கு நல்லார் உரை.


1. கடலாடு காதை, 54-55

2. கடலாடு காதை, 44-45