பக்கம் எண் :

கூத

கூத்துக் கலை

147


 

    இந்தக் கூத்தில் தூக்கு என்னும் தாள உறுப்பு சிறப்பாக இருக்கும்
என்று கலித்தொகைச் செய்யுள் கூறுகிறது.

 

     ‘‘மண்டமர் பலகடந்து மதுகையால் நீறணிந்து

    பண்டரங்கம் ஆடுங்கால் பணையெழில் அணைமென்றோள்

    வண்டரற்றும் கூந்தலாள் வளர்தூக்குத் தருவாளோ’’

 

என்பது அச்செய்யுள்.

 

     பாண்டரங்கக் கூத்து ஆறு உறுப்புகளையுடையது.

 

  6. மல்: மல்லாடல் என்பது, கண்ணன் வாணன் என்னும் அவுணனுடன்
மற்போர் செய்து அவனைக் கொன்றதைக் காட்டும் கூத்து.

 

    ‘‘அவுணற் கடந்த மல்லி னாடல்’’

 

     என்பது சிலப்பதிகாரம். ‘‘வாணனாகிய அவுணனை வேறற்கு
மல்லனாய்ச் சேர்ந்தாரிற் சென்று அறைகூவி உடற் கரித்தெழுந்து
அவனைச் சேர்ந்த அளவிலே சடங்காகப் பிடித்து உயிர்போக நெரித்துத்
தொலைத்த மல்லாடல்’’ என்பது அடியார்க்கு நல்லார் உரை.
 

     மல்லாடல் ஐந்து உறுப்புகளையுடையது.

 

     7. துடி: துடியாடல் என்பது, கடலின் நடுவில் ஒளிந்த சூரபதுமனை
முருகன் வென்ற பிறகு, அக்கடலையே அரங்கமாகக் கொண்டு துடி
(உடுக்கை) கொட்டியாடிய கூத்து.

 

     ‘‘மாக்கடல் நடுவண்

    நீர்த்திரை யரங்கத்து நிகர்த்துமுன் நின்ற

    சூர்த்திறங் கடந்தோன் ஆடிய துடி’’

என்பது சிலப்பதிகாரம்.1

 


1. கடலாடு காதை, 49-51.