பக்கம் எண் :

150
150

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்


  

    ‘‘காய்சின அவுணர் கடுந்தொழில் பொறாஅள்

    மாயவள் ஆடிய மரக்கால் ஆடல்’’

 

என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.1

 

     இதற்கு, ‘‘காயும் சினத்தையுடைய அவுணர் வஞ்சத்தால் செய்யும்

கொடுந்தொழிலைப் பொறாளாய் மாயோளால் ஆடப்பட்ட மரக்காலென்னும்
பெயரையுடைய ஆடல்’’ என்று உரை கூறுகிறார் அடியார்க்கு நல்லார்.

 

     இவ்வாடலுக்கு நான்கு உறுப்புகள் உண்டு.

 

     11. பாவை: பாவைக்கூத்து என்பது, போர் செய்வதற்குப்
போர்க்கோலங் கொண்டு வந்த அவுணர் மோகித்து விழுந்து இறக்கும்படி,
திருமகள் ஆடிய கூத்து. இதனை,

 

     ‘‘செருவெங் கோலம் அவுணர் நீங்கத்

    திருவின் செய்யோள் ஆடிய பாவை’’

 

என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.2

 

     ‘‘அவுணர் வெவ்விய போர் செய்வதற்குச் சமைந்த
போர்க்கோலத்தோடு மோகித்து விழும்படி கொல்லிப் பாவை வடிவாய்ச்
செய்யோளாகிய திருமகளால் ஆடப்பட்ட பாவையென்னும் ஆடல்’, என்பது
அடியார்க்கு நல்லார் உரை.

 

     இப்பாவைக்கூத்து மூன்று உறுப்புகளையுடையது.

 

     இப்பாவைக் கூத்தை, பொம்மையாட்டம் என்னும் தோற்பாவைக்
கூத்தென்று மயங்கக் கூடாது. பாவைக் கூத்து வேறு; பொம்மைக் கூத்து
வேறு.

 


 1. கடலாடு காதை, 58-59.

 2.       கடலாடு காதை, 60-61.