174 |
தமிழர் வளர்த்த
அழகுக் கலைகள் |
உலகியல் உண்மையொன்று உதிக்கிறது. உலகத்திலே நல்லவரைக் கண்டு
மகிழ்பவரும் இருக்கிறார்கள்; அந்நல்லவரைக் கண்டு முகங் கடுக்கிறவர்களும்
இருக்கிறார்கள். எல்லாருக்கும் ஒருமிக்க நல்லவராக இருப்பவர் உலகத்தில்
இலர் என்னும் உண்மை அவர் கருத்தில்
தோன்றுகிறது. அக்கருத்தை அவர்
சொல்லோவியமாகத் தீட்டுகிறார்.
‘‘அங்கொளி விசும்பிற் றோன்றும்
அந்திவான் அகட்டுக் கொண்ட
திங்களங் குழவிப் பால்வாய்த்
தீங்கதிர் அமுதம் மாந்தித்
தங்கொளி விரிந்த ஆம்பல்
தாமரை குவிந்த ஆங்கே
எங்குளார் உலகில் யார்க்கும்
ஒருவராய் இனிய நீரார்.’’1
உலகியல் உண்மை ஒன்றையும் இயற்கைக் காட்சி ஒன்றையும்
அமைத்து
இலக்கியக் கலைஞன் அழகும் இனிமையும் உண்மையும் தோன்ற
அமைத்த இச்சொல்லோவியம் போன்று
சிற்பக் கலைஞனும்
ஓவியக்கலைஞனும் சிற்பமும் ஓவியமும் அமைத்துக் காட்டமுடியாது.
அவர்கள், ஆகாயத்திலே வெண்ணிலா இருப்பதையும், குளத்திலே
ஆம்பல் மலர்ந்து தாமரை கூம்புவதையும் அழகாகக் காட்ட முடியும்.
ஆனால், ‘‘எங்குளார் உலகில் யார்க்கும்
ஒருவராய் இனிய நீரார்’’ என்னும்
உண்மையைச் சிற்பத்திலும் ஓவியத்திலும்
எவ்வாறு காட்ட
முடியும்?
இவ்வாறு காட்டுவது இலக்கியக் கலைஞராலேதான் முடியும்.
1. சூளாமணி. கலியாணச் சருக்கம், 205
|