பக்கம் எண் :

காவியக் கலை

175


 

 தேவாரம்

 

     திருநாவுக்கரசு சுவாமிகள், கடவுளுடைய கருணை (திருவடி நிழல்)
எதைப்போல இருந்தது என்பதை விளக்குகிறார். இனிய இளவேனிற் காலம்;
சூரியன் மறைந்த மாலை நேரம்; வானத்திலே வெண்ணிலா தோன்றி,
பால்போல நிலவைப் பொழிகிறது. இந்தக் குளிர்ந்த நேரத்தில் தாமரைக்
குளத்தின் அருகிலே அமர்ந்திருக்கிறோம். தென்றற் காற்று
தவழ்ந்து வந்து மெல்லென வீசுகிறது. பசுமையான இலைகளுக்கிடையே
பூத்துள்ள செந்தாமரை, வெண்டாமரை மலர்களின் மேலே ரீங்காரம்
செய்தவண்ணம் வண்டுகள் பறந்து விளையாடுகின்றன. வீணை வாசிக்கும்
இனிய இசை, சுவையுள்ள அமுதம்போல் செவியில் புகுந்து மனத்திற்கு
மகிழ்ச்சியைத் தருகிறது.

 

     இளவேனில், மாலைநேரம், தாமரைக் குளம், தென்றற் காற்று,
நிலாவெளிச்சம், வீணைநாதம் இவ்வளவும் ஒன்று சேர்ந்தால் எப்படி
இருக்குமோ, அதுபோல  இறைவனுடைய இன்னருள் இருந்தது என்று கூறிச்
சிறுபாடலில் சொல்லோவியம் அமைத்துக் காட்டுகிறார் நாவுக்கரசர்.

 

     ‘‘மாசில் வீணையும் மாலை மதியமும்

    வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்

    மூசு வண்டறை பொய்கையும் போன்றதே

    ஈசன் எந்தை இணையடி நீழலே’’

 

என்பது அப்பாடல்.

 

    இவ்வாறு, இலக்கியக் கலையில் அமைத்துக் காட்டப்பட்ட இக்கருத்தைச்
சிற்பக் கலைஞனோ ஓவியப் புலவனோ தனது சிற்ப ஓவியக் கலைகளில்
அமைத்துக் காட்ட