பக்கம் எண் :

178
178

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்


 

    ‘‘யாதானுமொன்றைக் கூறிய வழி யதன்கட் பொருண்மையை
விசாரித்துணர்தலன்றி, அவ்விடத்து வரும் பொருண்மையானே மெய்ப்பாடு
தோன்ற முடிப்பது மெய்ப்பாடென்னும் உறுப்பாம்... செய்யுட் செய்வார்
மெய்ப்பாடு தோன்றச் செய்தல் வேண்டு மென்பது கருத்து.’’

 

     இதனாலே, காவியச் செய்யுளிலும் மெய்ப்பாடு என்னும் சுவையமைய
நூலியற்றவேண்டும் என்பது தெரிகிறது.

 

     தமிழர் தொன்றுதொட்டு இலக்கியக் கலையை வளர்த்திருக்கிறார்கள்.
திராவிடக் குழுவினரில் மிகப் பழைய இலக்கியங்களைக் கொண்டிருப்பவர்
தமிழரே. தமிழ் இலக்கியங்களை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை:
1. சங்ககால இலக்கியங்கள், 2.இடைக்கால இலக்கியங்கள், 3. பிற்கால
இலக்கியங்கள் என்பன.

 

சங்ககால இலக்கியம்

 

     சங்ககால இலக்கியங்கள் கி.பி.300க்கு முற்பட்ட காலத்திலே
இயற்றப்பட்டவை. அவை அகநானூறு, புறநானூறு, நற்றிணை நானூறு,
குறுந்தொகை நானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து,
பத்துப்பாட்டு முதலியவை. இவை அகப்பொருளாகிய காதலைப் பற்றியும்,
புறப்பொருளாகிய வீரத்தைப் பற்றியும் பேசுகின்றன. சிலப்பதிகாரம்,
மணிமேகலை என்னும் இரண்டு காவியங்களும் சங்ககாலத்திலே
இயற்றப்பட்டவை. பெருங்கதையும் அக்காலத்ததே. பெருங்கதையின்
முற்பகுதியும் பிற்பகுதியும் மறைந்துவிட்டன. சங்ககாலத்துப் பாரதமும்
இராமாயணமும் முழுவதும் மறைந்துவிட்டன.