பக்கம் எண் :

22

22

தமிழர் வளர்த்த அழகுக்கலைகள்


 

     மனிதனுடைய நல்வாழ்விற்கு உதவுகிற எல்லாத் தொழில்களையும்
கலைகள் என்று கூறலாம். தச்சுவேலை, கருமாரவேலை, உழவு, வாணிபம்,
நெசவு, மருத்துவம் முதலிய தொழில்கள் யாவும் கலைகளே. பண்டைக்
காலத்திலே நமது நாட்டிலே அறுபத்துநான்கு கலைகள் இருந்தன என்று
மணிமேகலை முதலிய நூல்கள் கூறுகின்றன. அக்காலத்தில் அறுபத்துநான்கு
கலைகள் இருந்தன என்றால், பல துறையிலும் நாகரிகம்  பெருகியுள்ள
இந்தக் காலத்திலே கலைகளின் எண்ணிக்கை மிகமிகப் பெருகியிருக்கிறது
என்பதில் ஐயம் இல்லை.
 

     நாம் இங்கு ஆராயப் புகுவது இந்தப் பொதுக் கலைகளைப்பற்றி
அன்று.  இப்பொதுக் கலைகளுக்கு வேறுபட்ட அழகுக் கலைகளைப்
பற்றித்தான் ஆராய்ச்சி செய்யப்போகிறோம்.

 

     பலவகையான தொழில்களில் வளர்ச்சியும் தேர்ச்சியும் அடைந்து,
தனது வாழ்க்கைக்கு வேண்டிய உணவு, உடை, உறையுள், கல்வி, செல்வம்
முதலியவையும்  பெற்று நாகரிகமாக வாழ்கிற மனிதன், இவற்றினால்மட்டும்
மனவமைதி அடைகிறதில்லை.நாகரிகமாக வாழும் மக்கள் உண்டு, உடுத்து,
உறங்குவதனோடு மட்டும் திருப்தியடைவதில்லை. அவர்கள் மனம் வேறு
இன்பத்தை அடைய விரும்புகிறது. அந்த இன்பத்தைத் தருவது எது?
அழகுக்கலைகளே. நாகரிக மக்கள் நிறை மனம் - திருப்தி - அடைவதற்குத்
துணையாயிருப்பவை அழகுக் கலைகள்தாம். அழகுக் கலைகள் மனிதனுடைய
மனத்திற்கு அழகையும் இன்பத்தையும் அளிக்கின்றன. அழகுக்
கலைகளின் வாயிலாக மனிதன் நிறைமனம் (திருப்தி) அடைகிறான்.
 

     அழகுக் கலைக்கு இன்கலை என்றும், கவின்கலை என்றும், நற்கலை
என்றும் வேறு பெயர்கள் உண்டு.