பக்கம் எண் :

New Page 1

அழகுக் கலைகள் எவை?

23


 

     மனிதனுடைய மனத்தில் உணர்ச்சியை எழுப்பி அழகையும்
இன்பத்தையும் அளிக்கிற பண்பு அழகுக் கலைகளுக்கு உண்டு. மனிதன்
தன்னுடைய அறிவினாலும் மனோபாவத்தினாலும் கற்பனையினாலும் அழகுக்
கலைகளை அமைத்து, அவற்றின் மூலமாக  உணர்ச்சியையும் அழகையும்
இன்பத்தையும் காண்கிறான். அழகுக் கலைகள், மனத்திலே உணர்ச்சியை
எழுப்பி அழகுக் காட்சியையும் இன்ப உணர்ச்சியையும்  கொடுத்து
மகிழ்விக்கிற படியினாலே, நாகரிகம் படைத்த மக்கள் அழகுக் கலைகளப்
போற்றுகிறார்கள்; போற்றி வளர்க்கிறார்கள்; துய்த்து இன்புற்று
மகிழ்கிறார்கள்.

 

     அழகுக் கலையை விரும்பாத மனிதனை அறிவு நிரம்பாத விலங்கு
என்றே கூறவேண்டும்; அவனை முழு நாகரிகம் பெற்றவன் என்று
கூறமுடியாது.

 

     அழகுக் கலைகள் எத்தனை? அழகுக் கலைகள் ஐந்து. அவை
கட்டடக் கலை, சிற்பக்கலை, ஓவியக் கலை, இசைக் கலை, காவியக் கலை என்பன. பண்டைக் காலத்தில் நமதுநாட்டவர் கட்டடக் கலையையும் சிற்பக் கலையையும்1 ஒரே பெயரால் சிற்பக்கலை என்று வழங்கினார்கள். ஆனால், கட்டடக் கலை வேறு; சிற்பக் கலை வேறு.

 

     காவியக் கலையுடன் நாடகக் கலையும் அடங்கும். அழகுக் கலைகளில் காவியக் கலை, இசைக் கலை இரண்டையும் பண்டைத்தமிழர் இயல், இசை, நாடகம் என்ற மூன்றாகப் பிரித்தனர். அவர்கள் இயற்றமிழ் என்று கூறியது காவியக் கலையை. செய்யுள் நடையிலும் வசன நடையிலும் காவியம் அமைப்பது இயற்றமிழ் எனப்பட்டது. செய்யுளை இசையோடு பாடுவது இசைத் தமிழ் எனப்பட்டது. இயலும் இசையும் கலந்து ஏதேனும்

கருத்தையோ கதையையோ


1. Architecture and Sculpture