பக்கம் எண் :

34

34

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்


 

மகேந்திரவாடி, சீயமங்கலம், மேலைச்சேரி, வல்லம், மாமண்டூர், தளவானூர்
சித்தன்ன வாசல முதலிய ஊர்களிலும் இவ்வரசன் அமைத்த குகைக்
கோயில்கள் உள்ளன.1
 

   மகேந்திரவர்மனுக்குப் பிறகு, அவன் மகன் மாமல்லனான
நரசிம்மவர்மனும், அவனுக்குப் பின்னர் பரமேசுவரவர்மன் முதலியவர்களும்
மாமல்லபுரம் (மகாபலிபுரம்), சாளுவன் குப்பம் முதலிய இடங்களில்
குகைக்கோயில்களையும் ‘இரதக்’கோயில்களையும பாறைகளில்
அமைத்தார்கள்.2

 

  கருங்கற் பாறைகளைக் குடைந்து அமைக்கப்பட்ட இக்குகைக்
கோயில்களில், மரத்தில செய்யப்பட்ட மரவேலைபோன்ற சில அமைப்புகள்
காணப்படுகின்றன. இந்த அமைப்புகள்,முன்பு கூறியபடி, பண்டைக் காலத்தில்
மரங்களினால் கோயில்கள் கட்டப்பட்டன என்பதைக் காட்டுகின்றன.

 

கற்றளிகள்

 

     கி. பி. 7ஆம் நூற்றாண்டின் இறுதியில் அரசாண்ட இரண்டாம்
நரசிம்மவர்மன் ஆன இராஜசிம்மன் காலத்தில் கற்றளிகள் அமைக்கும் முறை
ஏற்பட்டது. கற்றளி என்றால் கற்கோயில் என்பது பொருள். கருங்கற்களை
ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கிக் கட்டப்படும் கோயில் கட்டடங்களுக்குக்
கற்றளி என்பது பெயர். சுண்ணம் சேர்க்காமலே இக்கட்டடங்கள்
அமைக்கப்பட்டன.

 


1.       மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் எழுதியுள்ள ‘‘மகேந்திரவர்மன்’’
என்னும் நூலைக் காண்க.

2.      மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் எழுதியுள்ள ‘‘நரசிம்மவர்மன்’’
என்னும் நூலைக் காண்க.