பக்கம் எண் :

36

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்


 

அமைக்கப்பட்டவை. அடிமுதல் முடிவரையில் நான்கு பட்டையாக (சதுரமாக)
அமைக்கப்படுவது இது. இது தமிழ்நாட்டில் இடம் பெறவில்லை. ஆகவே,
இது நமது ஆராய்ச்சிக்கு உட்படவில்லை.

 

     இரண்டாவதான வேசரம் என்னும் பெயருள்ள கட்டடவகை, பண்டைக்
காலத்தில பெரிதும் பௌத்த மதத்தாரால் வளர்ச்சி அடைந்ததாகத்
தோன்றுகிறது. இந்த வேசரக் கட்டடங்கள், தரை அமைப்பிலும், உடல்
(கட்டட) அமைப்பிலும், விமான (கூரை) அமைப்பிலும் வட்டவடிவமாக
அல்லது நீண்ட அரை வட்டவடிவமாக இருக்கும். இந்தக்
கட்டட அமைப்பு முறை, தமிழ் நாட்டுக் கோயிற் கட்டட அமைப்பு
சிலவற்றில் இடம்பெற்றுள்ளது. இதைப் பற்றிப் பின்னர் அதற்குரிய இடத்தில் கூறுவோம்.

 

     மூன்றாவது பிரிவான திராவிடம் என்னும் பிரிவு தென் இந்தியக்
கோயிற் கட்டடங்களாகும். இவை வடக்கே கிருஷ்ணா நதிமுதல் தெற்கே
கன்னியாகுமரி வரையில் காணப்படுகின்றன. திராவிடக் கோயிற் கட்டட
வகையில் தமிழர், சளுக்கியர், ஹொய்சளர் முதலிய உட்பிரிவுகள் உள்ளன.
இந்த உட்பிரிவுகளை விடுத்துத் தமிழ்நாட்டுக் கோயில்களை மட்டும்
ஆராய்வோம். தமிழ்நாட்டுக் கோயில்களிலும் பல்லவர் காலத்துக்
கோயில்கள், (பிற்காலச்) சோழர் காலத்துக் கோயில்கள், பாண்டியர்
காலத்துக் கோயில்கள், விஜயநகர அரசர் காலத்துக் கோயில்கள் என்று
உட்பிரிவுகள் உள்ளன. அப்பிரிவுகளைத் தூண்கள், கூடுகள் முதலிய
அமைப்புகளிலிருந்து கண்டுகொள்ளலாம். நாம் இங்கு ஆராயப்
புகுவதெல்லாம் தமிழ் நாட்டுக் கோயில்களைப் பற்றிய பொதுவான
அமைப்புப் பற்றிய மேற்போக்கான செய்திகளையேயாகும்.