பக்கம் எண் :

40

40

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்


 

அமைத்தபடியினாலே, அம் மண்டபங்கள், மத்திய கோயிலின்
பார்வையையும் அழகையும் மறைத்துவிட்டன. சில இடங்களில் மத்திய
கோயிலின் விமானம் தெரியாதபடி மறைத்துவிட்டன.அன்றியும்,
கோயிலுக்குள் வெளிச்சம் புகாதபடி செய்து, பட்டப் பகலிலும்
கோயிலில் இருள் நிறைந்துவிட்டது. நமது கோயில்களில் பட்டப்
பகலிலும் இருள் சூழ்ந்திருப்பதன் காரணம், இந்தச் சுற்று மண்டபங்களே
ஆகும்.

 

மாடக்கோயில்கள்

 

     மாடக்கோயில்கள் என்றால், மாடிபோல் அமைந்த கோயில்கள் என்பது
பொருள். ஒன்றின்மேல் ஒன்றாக ஒன்பது நிலைகளையுடைய மாடக்
கோயில்களைச் சிற்ப நூல்கள் கூறுகின்றன. இக்காலத்தில் இரண்டு நிலை,
மூன்று நிலையுள்ள மாடக்கோயில்கள்தாம் இருக்கின்றன. மாடக் கோயில்கள்,
பல்லவர் காலத்துக்கு முன்பே, அதாவது, கி. பி. 6ஆம் நூற்றாண்டுக்கு
முன்னரே இருந்தன. ஆனால், அக்காலத்து மாடக்கோயில்கள்
செங்கல்லினால் அமைக்கப்பட்டவை. ஆகவே, அவை இக்காலத்தில் நிலை
பெற்றிருக்கவில்லை. அக்காலத்திலேயே அழிந்து விட்டன.

 

     சீர்காழிக்குக் கிழக்கே ஐந்து மைலில் உள்ள திருநாங்கூர் திருமணி
மாடக்கோயிலைத் திருமங்கை ஆழ்வார் தமது பெரிய திருமொழியில்
கூறுகிறார். இன்னொரு மாடக்கோயிலாகிய திருநறையூர் மாடக்கோயிலையும்
திருமங்கை ஆழ்வார் குறிப்பிடுகிறார். அதனைச் சோழன் செங்கணான்
கட்டியதாகவும் கூறுகிறார்.

 

     ‘‘செம்பியன்கோச் செங்கணான் சேர்ந்த கோயில்

      திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே’’

 

என்று அவர் கூறியது காண்க. திருநறையூருக்கு இப்போது நாச்சியார்
கோயில் என்று பெயர் கூறுகிறார்கள்.