பக்கம் எண் :

கட்டடக் கலை

41


 

     திருவைகல் என்னும் ஊரில் இருந்த ஒரு மாடக் கோயிலைத்
திருஞானசம்பந்தர் கூறுகிறார். திருவைகல் மாடக்கோயில் என்பதே
அக்கோயிலின் பெயராக இருந்தது. அதனைக் கட்டியவரும் செங்கட்
சோழன் என்று ஞானசம்பந்தர் தமது தேவாரத்தில் கூறுகிறார்.

 

     இந்த மாடக்கோயில்களைச் சோழன் செங்கணான் கட்டியதாக
ஆழ்வாரும் நாயனாரும் கூறுகிறபடியினாலே, இவை கி. பி. 7ஆம்
நூற்றாண்டுக்கு முன்னே கட்டப்பட்டவை என்றும், இவை செங்கல்லினால்
கட்டப்பட்டவை என்றும் தெரிகின்றன. ஆனால், இந்த மாடக் கோயில்கள்
எத்தனை நிலையை (மாடிகளை)க் கொண்டிருந்தன என்பது தெரியவில்லை.
மூன்று நிலை மாடக் கோயில்களாகத்தான் இருந்திருக்கவேண்டும்.

 

மாமல்லபுரத்து மாடக்கோயில்கள்

 

     கி. பி. 7ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் இருந்த செங்கற்
கட்டடங்களாலான மாடக் கோயில்களின் மாதிரியைப் பல்லவ அரசனான
நரசிம்மவர்மன் (மாமல்லன்) மாமல்லபுரமாகிய மகாபலிபுரத்திலே
கருங்கல்லினால் அமைத்திருக்கிறான். அவை இரண்டு நிலை, மூன்று
நிலையுள்ள மாடக்கோயில்கள் மாதிரி1 ஆகும்.

 

     அர்ச்சுனன் இரதம் என்று இப்போது தவறாகப் பெயர் வழங்கப்படுகிற
கோயில், இரண்டு நிலை (இரண்டு அடுக்கு) மாடக்கோயிலின் அமைப்பு
ஆகும். தருமராஜ இரதம் என்று தவறாகப் பெயர் வழங்குகிற இன்னொரு
மாடக்கோயில் மூன்று நிலையுள்ள மாடக்கோயிலின் அமைப்பு ஆகும்.2
சகாதேவ இரதம் என்பதும் மூன்று நிலையுடைய


1.       மாதிரி - Model

2.      தருமராஜ இரதம் என்பதற்குப் பழைய பெயர் அத்யந்தகாம பல்லவேச்சரம் என்பது