பக்கம் எண் :

74

74

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்


 

 பல்வகை மூர்த்தங்கள்

 

     சைவர், சிவபெருமானுடைய திருவுருவத்தைப் பல மூர்த்தங்களாகக்
கற்பித்தார்கள்; வைணவர்களும், திருமாலுடைய திருவுருவத்தைப் பல
மூர்த்தங்களாகக் கற்பித்தார்கள். கடவுளின் பலவித ஆற்றல்களைக்
காட்டுவதற்காகவே இவ்வாறு பல்வேறு மூர்த்தங்களைக் கற்பித்தார்கள்.
கடவுளின் சக்தியை அம்மன், தேவி என்னும் பெயரால் பெண் உருவமாகக்
கற்பித்தார்கள்.

 

     சிவபெருமானுடைய திருவுருவங்களை இருந்த கோலமாகவும், நின்ற
கோலமாகவும், ஆடுங் கோலமாகவும் கற்பித்தார்கள். திருமால்
திருவுருவங்களை நின்ற கோலமாகவும், இருந்த கோலமாகவும்,
கிடந்த(படுத்த) கோலமாகவும் கற்பித்தார்கள். இதனை நின்றான், இருந்தான்,

கிடந்தான் உருவம் என்பர்.

 

     மற்றும் கணபதி, முருகன், அம்மன் முதலிய தெய்வ உருவங்களையும்
கற்பித்தார்கள்.
 

பௌத்த, ஜைன சிற்பங்கள்

 

     நமது நாட்டிலே பண்டைக்காலத்திலே (கி.மு.3ஆம் நூற்றாண்டு முதல்
கி.பி.10ஆம் நூற்றாண்டு வரையில்) பௌத்த மதம் நன்றாகச்
செழித்திருந்தது.1 அக்காலத்தில் பௌத்தராக இருந்த தமிழர்கள், புத்தர்
உருவத்தையும் பௌத்தத் தெய்வ உருவங்களையும் வழிபட்டார்கள்.
அவர்களும் ஆதிகாலத்தில் புத்தர் திருவுருவத்தை வைத்து வணங்காமல்,
பாத பீடிகை, தருமச் சக்கரம் ஆகிய புத்தருடைய  அடையாளங்களை
வைத்து வணங்கினார்கள். பிறகு புத்தருடைய திருவுருவம் கற்பிக்கப்பட்ட
காலத்தில், அவர்கள் புத்தருடைய உருவத்தை வைத்து வணங்கினார்கள்.


1. இந்நூலாசிரியர் எழுதியுள்ள ‘‘பௌத்தமும் தமிழும்’’, ‘‘சமணமும்
தமிழும்’’ என்னும் நூல்களில் காண்க.