ஓவியக் கலை
நமது நாட்டு ஓவியக் கலையை ஆராய்வோம். ஓவியத்துக்குச் சித்திரம்
என்றும் பெயர் உண்டு.
நேர்கோடு, வளைந்த கோடு, கோணக்கோடு முதலிய
கோடுகளினாலும், சிவப்பு, கறுப்பு, மஞ்சள்,
நீலம் முதலிய நிறங்களினாலும்
ஓவியங்கள் எழுதப்படுகின்றன.
ஓவியக் கலையின் பழைமை
சங்க காலத்திலே, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஓவியக்
கலை நமது நாட்டில் வளர்ச்சியடைந்திருந்தது
என்பதற்குச் சங்க நூல்களிலே
சான்றுகள் உள்ளன. நமது நாட்டு ஓவியங்கள் பெரும்பாலும் சுவர்
ஓவியங்களே.
அதாவது, சுவரிலே
எழுதப்பட்ட ஓவியங்கள். சிறுபான்மை
மரப்பலகைகளிலும், கிழி (துணிச்சீலை -
Canvas) களிலும் எழுதப்பட்டன.
படம் என்று இப்போது வழங்குகிற தமிழ்ச் சொல் ஆதிகாலத்தில்
துணியில்
சித்திரம் எழுதப்பட்டதைத் தெரிவிக்கின்றது. படம் அல்லது படாம் என்பது,
சித்திரம்
எழுதப்பட்ட துணிச்சீலை என்னும் பொருள் உடையது.
காவிரிப்பூம் பட்டினத்தில் இருந்த உவவனம் என்னும் பூஞ்சோலையின்
இயற்கைக் காட்சி,
ஓவியன் ஒருவன் துணிச்சீலையில் அழகாக எழுதிய
சித்திரப் படம் போல
இருந்தது என்று மணிமேகலைக்
காவியத்தில்
சீத்தலைச் சாத்தனார் கூறுகிறார்:
‘‘வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினைச்
சித்திரச் செய்கைப் படாம்போர்த் ததுவே
யொப்பத் தோன்றிய உவவனம்’’
என்பது அப்பகுதி.
|