பக்கம் எண் :

94
94

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்


 

 

        ‘‘எண்மெய்ப் பாட்டினுள் இரக்கம் மெய்ந்நிறீஇ

         ஒண்வினை ஓவியர் கண்ணினை விருத்தியுள்

         தலையது........’’1

 

         ‘‘ஒன்பது விருத்தி நற்பதம் நுனித்த

         ஓவவினை யாளர் பாவனை நிறீஇ

         வட்டிகை வாக்கின் வண்ணக் கைவினைக்

         கட்டளைப் பாவை......’’2

 

     ஓவியக் கலைஞர் நகை, உவகை, அவலம், வீரம் முதலிய எட்டு வகை
மெய்ப்பாடுகளையும், இருத்தல், கிடத்தல், நிற்றல் முதலிய ஒன்பது
வகையான விருத்திகளையும் தமது சித்திரங்களில் அமைத்து எழுதியதை
இப்பகுதிகள் விளக்குகின்றன.

 

     உதயண மன்னன் பள்ளியறையுள் இருந்தபோது, அவ்வறையின்
சுவர்களில் ஓவியக் கலைஞர் எழுதியிருந்த பூங்கொடி, மான், மறி முதலிய
ஓவியங்களைக் கண்டு வியந்தான் என்று கூறுகிறார்:

    

     ‘‘வித்தகர் எழுதிய சித்திரக் கொடியின்

    மொய்த்தலர் தாரோன் வைத்துநனி நோக்கிக்

    கொடியின் வகையுங் கொடுந்தாள் மறியும்

    வடிவமை பார்வை வகுத்த வண்ணமும்

    திருத்தகை யண்ணல் விரித்துநன் குணர்தலின்

    மெய்பெறு விசேடம் வியந்தனன் இருப்ப.’’3

 

    சிந்தாமணிக் காவியத்தை இயற்றிய திருத்தக்க தேவர், சோழ அரசர்
பரம்பரையில் வந்தவர். அரச பரம்பரையில்

 


1.  உஞ்சைக் காண்டம் : நருமதை சம்பந்தம்., 45-47.

2.  இலாவாண காண்டம், நகர்வலங் கொண்டது, 40-44.

3.  மகத காண்டம், நலனாராய்ச்சி, 97-102.