பக்கம் எண் :

New Page 2
96

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்


 

    விசையை என்னும் அரசி, தனக்குச் சுடுகாட்டிலே உதவி செய்த ஒரு
பெண் தெய்வத்தின் உருவத்தையும், தான் ஏறிச் சென்ற மயிற்பொறி
விமானத்தின் உருவத்தையும் அரண்மனைச் சுவரிலே ஓவியமாக எழுதுவித்த
செய்தியைத் திருத்தக்கதேவர் கூறுகிறார்:

    

     ‘‘தனியே துயருழந்து தாழ்ந்து

        வீழ்ந்த சுடுகாட்டுள்

     இனியாள் இடர்நீக்கி ஏமஞ்

        சேர்த்தி உயக்கொண்ட

     கனியார் மொழியாட்கும் மயிற்கும்

        காமர் பதிநல்கி

     முனியாது தான்காண மொய்கொள்

        மாடத் தெழுதுவித்தாள்.’’1

 

     மகளிர் சிலர் தமது வீடுகளிலே வர்ணங்களினாலே சித்திரங்களை
எழுதிக்கொண்டிருந்தபோது, தெருவிலே நிகழ்ந்த ஒரு காட்சியின்
சந்தடியைக் கேட்டுத்  தாம் எழுதிய ஓவியங்களை அப்படியே விட்டுவிட்டுத்

தெருவாயிலில் வந்து நின்றதை ஒரு கவியில கூறுகிறார்.

 

     ‘‘வட்டிகை மணிப்பலகை வண்ணநுண் துகிலிகை

    இட்டிடை நுடங்கநொந் திரியலுற்ற மஞ்ஞையில்

    கட்டழ லுயிர்ப்பின்வெந்து கண்ணிதீந்து பொன்னுக

    மட்டவிழ்ந்த கோதைமார்கள் வந்துவாயில் பற்றினார்.’’2

 

     தக்க நாட்டிலே சீவகன் யாத்திரை செய்தபோது, அந்நாட்டில்
காட்சியளித்த தாமரைக் குளங்கள், திரைச் சீலையில் ஓவியக் கலைஞன
எழுதிய தாமரைக் குளம் போலத் தோன்றின என்று கூறுகிறார்.
 


1.     முத்தி இலம்பகம், 5.

2.      குணமாலையார்., 259