பக்கம் எண் :

ஓவ

ஓவியக் கலை

97


 

    ‘‘படம்புனைந் தெழுதிய வடிவில் பங்கயத்

    தடம்பல தழீஇயது தக்க நாடு.’’1

 

     குணமாலை என்னும் கன்னிகை தன் தோழியுடன் பல்லக்கு ஏறி வீதி
வழியே சென்று கொண்டிருந்தாள். அப்போது, அசனிவேகம் என்னும்
பெயருள்ள யானை மதங்கொண்டு, பாகர்க்கு அடங்காமல் வீதி வழியே
ஓடிவந்தது. குணமாலையின் பல்லக்கைத் தூக்கிச் சென்றவர், மதயானைக்கு
அஞ்சிச் சிவிகையைக் கீழே வைத்துவிட்டு உயிர் தப்பிஓடிவிட்டார்கள்.
யானை குணமாலைக்கு அருகில் வந்துவிட்டது. தப்பி ஓட முடியாமல் அவள்
அஞ்சி நடுங்கினாள். அப்போது தோழர்களோடு அவ்வழியே வந்த சீவகன்,
கன்னியின் ஆபத்தைக் கண்டு, யானைப்போரில் பழகியவன் ஆதலின்,
திடுமென ஓடிச்சிங்கம்போல் கர்ச்சித்து யானையின் முன்பு பாய்ந்து, அதன்
இரண்டு கொம்புகளையும் பிடித்து அதன் மதத்தை அடக்கினான்.
குணமாலை அச்சத்தால் மெய்நடுங்கி நின்றாள்.

 

     அப்போது அவன் தற்செயலாக அவள் முகத்தை நோக்கினான்.
அவளுடைய அழகான முகத்தில் அச்சம் என்னும் மெய்ப்பாடு
அமைந்திருப்பதைக் கண்டான். இவ்வாறு யானையை அடக்கிக் கன்னியின்
துயரத்தை நீக்கிய பிறகு, சீவகன் தன் இல்லஞ் சென்றான். சென்று, ஓவியக்கலையில் வல்லவனான அவன், யானையின் முன்னிலையில்
குணமாலை அஞ்சி நடுங்கி அச்சம் என்னும் மெய்ப்பாடு தோன்றும்படி ஒரு
சித்திரத்தை எழுதினான் என்று திருத்தக்கதேவர் கூறுகிறார். அச்செய்யுள்
இது:

 

     ‘‘கூட்டினான் மணிபல தெளித்துக் கொண்டவன்

    தீட்டினான் கிழிமிசைத் திலக வாள்நுதல்

    வேட்டமால் களிற்றின்முன் வெருவி நின்றதோர்

    நாட்டமும் நடுக்கமும் நங்கை வண்ணமே.’’2

 


1. கேமசரியார்., 28.

2. குணமாலையார்., 155.