பக்கம் எண் :

16தமிழ்க்காதல்

சொல்லாததையும், இது பொருளதிகாரம் என்று முழு நிறைவு கொண்டதையும்
எல்லாம் எண்ணுங்கால், பொருள் என்பது பண்டு அகத்திணையையே
நினைப்பித்த சிறப்புநிலை புலப்படும்.


     அகப் பாடல் இயற்றுதற்கு, நிலத்தின் காலத்தின் இயற்கையறிவு
வேண்டும். மரஞ் செடி கொடி பறவை விலங்குகளின் தன்மைக் கல்வி
வேண்டும். அஃறிணை யுயிர்களின் இன்பப் புணர்வை, மக்களின் இன்பப்
புணர்வோடு தரஞ்செய்து பார்க்கும் சீர்மை வேண்டும். காதல்வாய்ப் பழகும்
இளநெஞ்சங்களின் தூய எண்ண நாடிகளைக் கற்பனையால் அளந்து
கவின்செய்யும் மனப்பதம் வேண்டும். சங்கஇலக்கியத்து அகத்திணைப்
பாடற்றொகையும், அகம் பாடினோர் தொகையும், புறத்திணையினும்
மும்மடங்கு மிக்கிருத்தலை மதிக்குங்கால், சங்கச் சான்றோர் அகம்
பாடுவதையே புலமைக்கிடனாகப் போற்றினர் என்று கருத்து
வெளிப்படுமன்றோ? டாக்டர் வரதராசனாரும் டாக்டர் தனிநாயக அடிகளும்
சங்க இலக்கியத்தின் இயற்கைப் பகுதிகளைத் திறம்பட ஆராய்ந்துள்ளனர்.
இயற்கையை இயற்கைக்காவே பாடும்நிலை - அதனைத் தனிப் பொருளாகக்
கொண்டு கருத்துரைக்கும் துறை-சங்க காலத்தில் இருந்ததில்லை என்றும்,
மக்களின் ஒழுகலாற்றிற்கும் சிறப்பாக் காதலொழுக்கத்திற்கும் பக்கப்
பொருளாகப் பாடும் சார்பு நிலையே இயற்கைக்கு அன்றே இலக்கியத்தில்
இடமாய் இருந்தது என்றும், அவ்விருவரும் தத்தம் நெறியால்
அறுதியிட்டுரைப்பர். இவ்வகைக் காரணங்களைக் கூட்டிப் பார்க்கும்போது,
சங்க இலக்கியத்தில் அகத்திணைப்
பொருள் பெற்றிருக்கும் மேம்பாட்டினை
மட்டுமோ அறிகின்றோம்? சங்க காலப் பண்பை ஆராய்குநர் முதற்கண்
ஆராய வேண்டுவது அகத்திணை என்பதும், அகத்திணையைக் கற்று ஓர்ந்து
நுணுகி ஒரு தெளிவு பெற்றால்லது, பண்டைப் பெருந்தமிழினத்தின் நாகரிகச்
சால்பினை நாம் கண்டவர்கள் ஆகோம் என்பதும் புலனாகவில்லையா?


                         
II

     எண் அகத்திணை ஆராய்ச்சிக்குச் சங்கத்தொகைப் பனுவல்களே
கருவியாம். 2381 சங்கப் பாடல்களுள் 1862 அகத்திணை நுதலுமவை.
இத்தொகை பின் வருமாறு:


     அகநானூறு     (முழுதும்) 400 பாடல்கள்

     நற்றிணை         ...     400 பாடல்கள்
     குறுந்தொகை      ...     401 பாடல்கள்
     ஐங்குறுநூறு       ...     500 (129, 130ஆம் பாடல்கள்
                            தொலைந்தன)