பக்கம் எண் :

அகத்திணைத் தோற்றம்163

அவனைத் தூண்டும். தூண்டும் என்பது தலைவி தோழியரின் நம்பிக்கை.
இந்நம்பிக்கை இயற்கையானது, காதலை நினைப்பிக்கும் என்ற கருத்து,
மரபாகத் தமிழினம் முழுதும் ஓடிவருதலின், தொல்காப்பியர்,

    அன்புறு தகுந இறைச்சியுட் சுட்டலும்
    வன்புறை யாகும் வருந்திய பொழுதே   (தொல். 1176)

என்று ஒரு நூற்பா வடிவில் யாத்துக் காட்டினார்; இயற்கையுள் புலனின்பம்
காணும் இனவுள்ளத்தை இலக்கணப்படுத்தினார். தோழி ஆற்றுவித்தல்,
தலைவி ஆற்றுவல் என்பது படக் கூறல் என்னும் துறைகள்மேல் எழுந்த
நூற்றுக்கு மேலாய பாடல்களில் நாம் காண்பது என்ன? ஆண்யானை
தன்மனைவியாகிய பிடியின் நாவறட்சியைக் காண்கிறது. யாமரத்தைத் தன்
கொம்பாற் குத்திப் பட்டையை எடுக்கின்றது. அதுவோ நீர்ப்பசையற்ற பட்டை.
என் செய்ய வல்லது களிறு? பிடியின் வருத்தத்தைத் தீர்க்கமுடியவில்லையே
என்று தானும் வருந்துகின்றது. பாலைநிலத்தில் இந்த ஆண் யானையின்
அன்பைக் காணும் நம் காதலர் என் வருத்தத்தைத் தீர்க்கவேண்டும் என்று
எண்ணமாட்டாரா?     

    மறந்தனர் கொல்லோ தாமே; களிறுதன்
    உயங்குநடை மடப்பிடி வருத்தம் நோனாது
    நிலையுயர் யாஅம் தொலையக் குத்தி,
    வெண்ணார் கொண்டு கைசுவைத் தண்ணாந்து
    அழுங்கல் நெஞ்சமொடு முழங்கும்
    அத்த நீளிடை அழப்பிரிந் தோரே      (குறுந்.307)

     என்பது ஒரு தலைவியின் வினா. கார்காலத்தில் நின்னைப் பிரிவது
எப்படி? பிரிந்து குளிர்ந்த காட்டுவழிச் செல்வது எப்படி? காண்போர்
கண்ணைக்கவரும் இன்பக் காட்சியைக் கண்டும் அப்பாற் செல்வது எப்படி?
கலைமான் தன் இளையமான் மனைவியோடு கூடிப் புணர்ந்து வேலமரத்தின்
தாழ் நிழலிலே கிடப்பதைக் கண்டால், காண்பவனுக்குத் தன் மனைவி
நினைவுதானே தோன்றும்? வீடு திரும்பும் எண்ணந்தானே விதுவிதுக்கும்?
புறப்பட்டுப்போய் வழியிடை மான் குடும்பத்தைப் பார்த்து அறிவறிந்து
திரும்புவதைக் காட்டிலும், போகாதே நின்னொடு உடனிருந்தும் விடுதல்
நல்லது;

    கார்பெயல் செய்த காமர் காலை,
    மடப்பிணை தழீஇய மாவெருத் திரலை
    காழ்கொள் வேலத் தாழ்சினை பயந்த
    கண்வர் வரிநிழல் வதியும்
    தண்படு கானமும் தவிர்ந்தனம் செலவே     (நற்.256)