பக்கம் எண் :

178தமிழ்க்காதல்

பெதும்பை என்று தெரிந்தே ஒருத்தியை ஒருவன் காதலித்தான். அவள்பால்
காதலரும்பு தோன்றாமையின், தன் உணர்வைத் தடுத்துக்கொண்டான் என்பது.
இதுவே எல்லாரும் கருதி எழுதிவரும் பொருள்.


     குமரியில்லை என்று முன் தெரிந்திருந்தும், வேண்டுமென்றே
காதல்விளையாட்டுப் புரிந்தான் என்ற கருத்து அந் நூற்பாவில் பின்வரும்
தொடர்களோடு பொருந்தவில்லை. அங்ஙனம் அன்னவளைக் காதலாடினான்
எனின், அவள் தன் காமத்துயரைத் தீர்க்கவில்லையே என்று அவன் ஏன்

கவலவேண்டும்? தீர்த்தற்கு வாய்த்த பருவத்தி இல்லை என்பது
தெரிந்ததுதானே? தன்னை மணந்தால் தனக்கும் அவளுக்கும் நன்மை
எனவும், மணக்காவிட்டால் இருவர்க்கும் தீமை எனவும் பெருமிதச்சொல்
பேசினான் என்பதில் பொருளுண்டோ? தன் சொல்லுக்கு அவளிடமிருந்து
மறுமொழி பெற்றானில்லை என்று சுட்டிக் காட்டுவானேன், காமஞ்சாலாச்
சிறுமியிடமிருந்து மறுமொழி வாராது என்பது தெரியாதா? காமத்துயர்
எய்தினான், பெருமிதம் மொழிந்தான், சொல்லெதிர் பார்த்தான்,
பயனொன்றுமில்லை, சொல்லியின் புற்றான் என்ற பிற்செயலெல்லாம்
காதலித்த பெண்ணைக் குமரி என்று முன்னே கொள்ளாதானுக்குத் தோன்றா.
குமரி என்ற கருத்தால் அவளை நாடினான் என்றும், அவள்யாதொரு
நாட்டமும் கொள்ளாமையின், ஆளாகாதவள் என்று குறிப்பால் அறிந்து
அமைந்தான் என்றும், முதற்பொருளைக் கொள்ளுவதே பொருந்தும்.


கைக்கிளையும் பெதும்பையும்


     கைக்கிளை என்பது வயதுவந்த ஓர் இளைஞனுக்கும் ஏழோ எட்டோ
என்றின்ன வயதுடைய மிகச்சிறுமிக்கும் இடையே நிகழும் காதல்
நிகழ்ச்சியைக்கூறும் திணையே எனின், அன்று. கைக்கிளைக்கண் ஆணால்
காதலிக்கப்படுபவள் இன்னும் ஆளாகாதவள், பூப்பெய்தாதவள் என்பது
உண்மையேயாயினும், பேதைப் பெண் அல்லள். இன்றோ நாளையோ இன்னும்
ஓரிரு திங்களிலோ, அணிமையில் ஆளாகத் தக்க பெரும்பெண் ஆவாள்.
“மகள் மேம்பட்ட கன்னிமை கனியாகக் கைக்கிளைக் காமம்” என்பர்.
நல்லந்துவனார்
(பரி. 11). கல்லூரிப் படிப்பில் சேருவதற்குப் பதினாலரை வயது
மாணவனோ மாணவியோ எய்திருத்தல் வேண்டும். பெற்றோரைப் பார்த்து’,
‘உங்கள் மகள் கல்லூரியிற் படிக்கின்றாளா?’ என ஒருவர் வினவுகின்றார்.
கல்லூரிக்கு உரியவயதைக் கிட்டத்தட்ட நெருங்கிய ஒரு மகளை
வினவுகின்றார் என்றுதான் பொருள்படும். அம்மகள் பதின்மூன்றிற்கும்
பதினாலரைக்கும் இடைப்பட்ட அகவையினள் என்று கருதலாம்.