பக்கம் எண் :

அகத்திணைத் குறிக்கோள்181

பருவ மயக்கம்

     ஆண் பெண் உருவ மயக்கங்களையும் அவற்றிற்கேற்ற
மாற்றுவேடங்களையும் சூழ்ச்சித்தளமாகக் கொண்டு, செகப்பிரியரின் சில
நாடகங்கள்நிகழ்கின்றன. ஆணைப் பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும்
இரு பாலார்க்கிடையே கோலமாற்றி நாடகம் புனைவர் செகப்பிரியர். ஓரளவு
அன்னதன்மைத்தே கைக்கிளை யிலக்கியம். இஃது ஒருபாலார் தம்முள்
மயக்கம் காட்டுவது. ஏறக்குறையப் பெண்பாலுள் ஒத்த பருவத்தோற்றத்தை

அடிப்படையாகக் கொண்டு நிகழ்வது. உடன் பிறந்தார் சிலர் முற்றும் உறுப்பு
ஒத்தவர்களாகக் காண்கின்றோம். அண்ணனோ தம்பியோ, தமக்கையோ
தங்கையோ என்று உற்றுநோக்கினும் வேறுபாடு காணல் அரிதரிது. இங்ஙனம்
இயற்கை தானே விளைக்கும் ஒருமை மயக்கங்கள் பலவுள. அவற்றின்
காரணமாக மக்கட்கு அறிவு மயக்கம் ஏற்படவே செய்யும். அதனால் அவர்க்கு
மனமாசு கற்பித்தலும், அறப்பிழை ஏற்றலும் கூடாது. “மனத்துக்கண்
மாசிலனாதல் அனைத்தறன்” என்பர் அறநூற் புலவர். ஆதலின் தோற்றத்தால்
குமரியென மயங்கிக் காதல்கொள்ள நினைத்த குமரன் குற்றமுடையவன்
அல்லன், மாசுடைய மனத்தவன் அல்லன். குமரியல்லள் என்று உணர்ந்தபின்
தன் செயலைத் தானே நகைத்துக்கொள்கின்றான். அவளும் குற்றமிலள்;
தானும் குற்றமிலன் என்று உணர்கின்றான்.     

    நீயும் தவறிலை நின்னைப்புறங்கடைப்
    போதர விட்ட நுமரும் தவறிலர்:
    நிறையழி கொல்யானை நீர்க்குவிட் டாங்குப்
    பறையறைந் தல்லது செல்லற்க என்னா
    இறையே தவறுடை யான்              (கலி. 59)

     ‘புறத்தே வந்த உன்மேலும் பிழையில்லை. புறத்தே வரவிடுத்த உன்
பெற்றோர்மேலும் பிழையில்லை. போர் யானை குளத்திற்கு நீர்குடிக்க
வந்தால், மதயானை வருகின்றது விலகிச்செல்லுங்கள் என்று பறைகொட்டி
முன்னறிவிப்பது அரச வழக்கம். அதுபோல, நீ புறத்தே வரும்போதும் அரசன்
தெரிவித்திருக்க வேண்டும். செய்யாமையின் அவனே பிழையுடையான்” என்று
கைக்கிளை இளைஞன் யார்பாலும் தவறில்லை என்ற பொருள்படப்
பேசுகின்றான். கன்னியில்லை என்றும், தன் காதலுக்குப் பொருளற்றவள்
என்றும், “வருந்த நோய் செய்திறப்பின் அல்லால் மருந்தல்லள் (கலி. 109)
என்றும் அறிந்து கொண்டபின், அவன் பேசும் பேச்சினைச்
“சொல்லியின்புறல்” என்று கூறுவர் தொல்காப்பியர். எண்ணிய மெய்யின்பம்
பெறவில்லையே என்று அவ்விளைஞன் கவலமாட்டான் என்பதும்,
கைக்கிளைச் செயல் அவன்தன்