யின்புறலாமே, இதுவும் கைக்கிளை தானே எனவினவலாம். தமிழ்ச் சமுதாயத்தில் அத்தகைய பெண்ணீர்மை இல்லை. இளங்குமரியர் காதலை முந்துற்றுக் காட்டுதல் இல்லை. நம் சமுதாயத்தில் காதற் போக்குக்கள் பலவுண்டு. நல்லனவும் உண்டு. தீயனவும் உண்டு. தீயனவற்றை விலக்கி நல்லனவற்றைத் தெரிந்து இலக்கியப்படுத்தி இலக்கணம் வகுத்தனர். சமுதாயத்தில் இல்லாத ஒழுகலாற்றை அன்னோர் யாண்டும் கூறிற்றிலர். பொதுவாகவே பெண்ணைக் காட்டிலும் ஆடவன்சில ஆண்டு மிக்கவனாக இருத்தல்வேண்டும் என்பது தமிழ்மணமுறை. “மிக்கோனாயினும் கடிவரை யின்றே” (தொல்.1038) என்பர் முதலாசிரியர். குமரனாயினும் தன்னின் இளையவனை மணக்கவிழையார் தமிழ்ப்பெண்கள். சிலவாண்டு உயர்ந்தவனையே மணம் நாடுவது அன்னவர் இயல்பு. அத்தகைய மனப்பான்மையோடு தமிழ்ச்சமுதாயம் தன் பெண் மக்களை வளர்த்து வந்தது; இன்றும் வளர்த்து வருகின்றது. ஆதலின் குமரியர் மகன்மை எய்தாத இளையவனைக் காமுறுதல் என்பது ஈண்டு இல்லாத வழக்கு. தமிழ்ப் பெண்கள் கற்புப்போல நாணத்தைக் காப்பவர்கள்; கற்புக்காக நாணத்தைப் பலியிடுவரேயன்றிக் காதலுக்காக நாணத்தைப் பலியிடாதவர்கள். பலியிடுவரேல் சமூகப்பழி பெரிதாய் விடும்; வாழ்வு இழிந்துவிடும். குமரன் ஆயினும் குமரன் ஆகாதவனாயினும் ஒருபெண் தன்காமவுணர்வைத் தானே முந்துற்று வெளிப்படுத்தி நில்லாள். அங்ஙனம் செய்வதை அவளது நாணமே தடுத்துவிடும். தாமுறு காமத் தன்மை தாங்களே யுரைப்ப தென்பது ஆமெனல் ஆவ தன்றால் அருங்குல மகளிர்க் கம்மா என்று தமிழ்ப் பெண்ணீர்மையைக் கம்பர் சூர்ப்பனகை வாய்மொழியாகக் கூறுவர். ஆதலின் அகத்திணைக் கைக்கிளையில் பெண்பாற்கு இடமில்லை. இடமில்லாதது இயல்பும் பெருமையும் ஆகும். ஆண் தன் காதலைத் தானே முந்துற்று விளம்பி நிற்கும் பிறவியாகும்; காதற்சுவைக்கண் ‘மாசறு பொன்னே! வலம்புரி முத்தே! காசறு விரையே! கரும்பே! தேனே!’ என்று ஆர்வச்சொல் அடுக்கும் பாலாகும். பெண்போல் ஆணும் நாணிப் பாலுணர்வை அடக்கிக் கொள்ளுமேல், பின்னர் யார்கொல் காதற்சிறையை உடைப்பவர்? யார்கொல் காதற் பயிரை வளர்க்கும் உழவர்கள்? கொடும்புறம் வளைஇக் கோடிக் கலிங்கத்து ஒடுங்கினள் கிடந்த ஓர்புறம் தழீஇ முயங்கல் விருப்பொடு முகம்புதை திறக்க (அகம்.86) திருமண நாளிரவில் கோடியாடைக்குள் தன் உடலை வளைத்து மிகமறைத்துக் கிடந்த காதலியைப் புறம் தழுவி முகமறைவை எடுத்தான் என்று நல்லாவூர்க்கிழார் ஆடவனது நீர்மையை, காதலில் |