மெய்ம்முயக்கம் உண்டு என்பது போதரும். இதனால் காமஞ்சான்ற குமரியைத்தான் மணம் செய்வர் என்று தெளியலாம். காதலனும் காதலியும் ஒத்த ஆண்டினராதல் வேண்டும் என்பர் தொல்காப்பியர். ஒத்த ஆண்டாவது ஆணுக்குப் பதினாறு, பெண்ணுக்குப் பன்னிரண்டு என்று விளக்கந்தருவர் பேராசிரியர். இம்மரபை யொட்டி, ஈராறு ஆண்டகவையாள் கண்ணகி எனவும், ஈரெட்டாண்டு அகவையான் கோவலன் எனவும் பாடுவர் இளங்கோ. இவ்வாண்டுக் கணக்கு குறைந்தது என்று கருத வேண்டா. குளிர் நாடுகளைக் காட்டிலும் தமிழகம் போலும் வெப்ப நாடுகளில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இளமை விரைவில் வந்துவிடும். பன்னிரண்டு பதினாறு என்ற ஆண்டின் உட்கோள் மணங்கொள்ளும் இருபாலாரும் ஆளாகியிருத்தல் வேண்டும் என்பதே ஆதலின், குமரியாகாதவளை வரைந்து கொடுக்கும் சிறுமணம் தமிழ்ச் சமுதாயத்தில் இல்லை எனத் தெளிக. சங்க இலக்கிய முழுதும், ஏன், தமிழிலக்கியத்து யாண்டுமே இச்சிறுமணம் பற்றிய செய்தி குறிப்பாகக்கூட இல்லை. V கைக்கிளை ஒருமனநிலை இதுகாறும் செய்த விளக்கத்தின் முடிவு என்ன? காமஞ் சாலாத இளையவளை-குமரிபோல்வாளை-ஓர் இளைஞன் காதலிக்கும் அகத்திணைக் கைக்கிளைக்குத் தமிழ்ச்சமுதாய வழக்கு இல்லை; அத்தகைய காதலை நிலைக்களனாகக்கொண்டு மேல் எந்நிகழ்ச்சியும் நடந்ததில்லை. இல்லாத ஒன்றினை ஏன் திணையாகப் படைத்தனர்? வெளிப்படையான தமிழ்ச் சமுதாய நடைமுறையில் இல்லாதது, செயல்படாதது என்பதுதவிர, இக்காமத் தன்மை தமிழ் மாந்தர்தம் உள்ளத்து நிகழும் ஒன்றேயாகும். ஒத்த தோற்றத்தால் பருவம் மயங்கி ஆடவன் கொள்ளும் காமத்தின் மனநிலையைச் சுட்டிக்காட்டுவதே அகக் கைக்கிளை. அம்மனநிலை கனாமயக்கம் போல்வது, நீடித்து நில்லாதது. இளம் பெண்களைக் காணுங்கால் குமரர்களுக்கு இயல்பாகத் தோன்றுவது. எனவே உள்ளத்தளவில் உள்ளது. கைக்கிளைப் பொருளாவது அறியாதே ஆணுள்ளத்தில் தோன்றி நின்று, உடனே உண்மை அறிந்தபின், தோன்றிய அவ்வுளத்திலேயே ஒழியும் ஒருவகைக் காமவுணர்வாகும். இது காமந் தந்த பெண்ணுக்கும் புறத்தார் யார்க்கும் புலனாகாதது. ஆயினும், ஓரிளையான் அகத்துப் பிறந்து நின்று மறைவது. இந்நுட்ப மனநிலையைத் தமிழ் மூதறிஞர்கள் கண்டனர். இந்நிலை குற்றமுடையதன்று எனவும். ஓரன்ன இயற்கையின் விளைவு எனவும் தெளிந்தனர். மெய் பருவத் தகுதி பெற்றிருந்தாலன்றி, உள்ளமாகிய நிலத்துக் காமவுணர்வு தோன்றாது. |