பக்கம் எண் :

அகத்திணைத் குறிக்கோள்187

     அகத்திணைப் பண்பாவது உள்ளப் புணர்ச்சி (ப.46) உள்ளங்கள்
புணரவேண்டும், உடல்கள் கூடும் பருவம் எய்தியிருத்தல் வேண்டும். அப்
பருவமிலிகள் உள்ளம் ஒன்றிக் காதலர்கள் ஆனார்கள். ஆவார்கள் என்றல்
நிலமின்றி நீர்விளைக்கும் என்பது போலாம். உள்ளப்புணர்வுக்கு
உடற்பருவத்தின் இன்றியமையாமையைக் காட்டுவதே கைக்கிளையின்
குறிக்கோள். பாலுளவியல் நூலாசிரியர் ஆசுவால் சார்ச்சு “காமவுணர்வும்
காதலும் தனி இயல்பினாவாயினும், ஒன்றினை ஒன்று சார்ந்து நிற்பன. தம்முள்
துணையாவன. முற்றிய பருவச் செம்மை அடைந்த மக்களிடத்துத் தான்
பாலுணர்ச்சியும் காதல் நோக்கமும் மிக இணைந்து நிற்கின்றன’ என்று
அறுதியிடுவர்1.


கைக்கிளை ஒரு குறுங்கரு


     அகத்திணையின் பண்பு உள்ளப்புணர்ச்சி எனின், அப் புணர்ச்சிக்கு
இடந்தராத கைக்கிளை அகத்திணையாவது எப்படி? உள்ளப் புணர்ச்சியாவது
நெஞ்சுத் தூய்மை, அன்புக் கூட்டுறவு. கைக்கிளைக் காதலில்
இத்தூய்மையில்லை, இக்கூட்டுறவு இல்லை. இக்காதலால் தூய்மை கெட்டு
விட்டது என்றோ, கூட்டுறவுக்கு இடையூறு என்றோ சொல்லுதற்கும் இல்லை.
ஓருள்ளம் புணர அவாவிற்று; மற்றோருள்ளம் அதனை ஏற்கும் பக்குவ
நிலையில் இல்லை. அதனால் அவாவிய முதலுள்ளம் தன் அவாவை முற்றும்
அடக்கிக் கொண்டது. இதனால் யார்க்கும் கேடு இல்லை; யாருடைய
தூய்மையும் கெடவில்லை. கைக்கிளை இளைஞன் இதனைத் தன் காதல்

வீழ்ச்சி, தோல்வி என்று கருதமாட்டான். நல்ல பருவ முற்றாளைக்
காதலித்து மணந்து வாழ்தலை இக் கைக்கிளை நினைவு தடுக்காது. காமம்
சாலா இளமையோள் காமப் பருவம் பெற்று ஒருவனுக்கு வரைந்து வாழ்வாள்.
ஓர் இளைஞனால் முன் கைக்கிளைப் பட்டவள் என்பதற்காக’ அவளுக்கு
நிறை மாசு இல்லை, மணத்தடையில்லை. இக்கைக்கிளை இளைஞனே அவள்
ஆளானபின் மணங்கொண்டு ஐந்திணைக் காதலனாகலாம். எவ்வகையான
நன்மணத்திற்கும் கைக்கிளை மாறில்லை, ஏன்? அதனால் மாசில்லை. “காமம்
சாலா என்றதனால் தலைமைக்குக் குற்றம் வாராதாயிற்று” என்பர் இளம்பூரணர்.

     வயது வந்த ஒருவனுக்கும் வயதுவந்த ஒருத்திக்கும் சிலர் மணம்
பேசுவதாக வைத்துக் கொள்வோம். இங்ஙனம் பேசி முடித்தல் நாட்டில் ஒரு
பெருவழக்கு. அப்பேச்சு கடைபோகவில்லை. முரிந்து விடுகின்றது என்பதனால்,
ஆணுக்கும் பெண்ணுக்கும் மாசு உண்டா? அவன் புதியவொரு பெண்ணை
மணப்பான்; அவள் புதியதொரு ஆடவனுக்கு மணம்பேசப்படுவாள். பேச்சு
முரிவு புதிய

 ____________________________________________________
     Oswald Schwarz: The Psychology of Sex, P. 21.