பக்கம் எண் :

அகத்திணைத் குறிக்கோள்243

கொள்ளலாமா? புறத்திணையின் பொருள் வீரம் மறம் பயின்ற வீரர்க்கே
போர்ச் செயல் உரியது. காதற் செயலோ எல்லார்க்கும் உரியது காண்.
வீரர்கள் முன்னர்த் தனியிடத்துப் பயிற்சி வாய்த்துப் பின்னர்ப் போர்க்களம்
புகுவர். அக் களம் புக்குப் பயிற்சி பெறுவதில்லை. பயிலாதார் பறந்தலை
புகார். காதலுக்குப் பயிற்சிக்களம் எனவும், உண்மைக்களம் எனவும்
இரண்டில்லை. உண்மைக்களமே உடன்பயில் களமாகும். காதலும் பயில்வும்
உடன் நிகழ்வதன்றிக் காதலுக்கென முன்னுறு பயிற்சி பெறுவதில்லை. பெறின்
அது காதலாகாது. ஆதலின் காதல் பயிலவேண்டா இயல்பெனவும்,
பிறப்புணர்ச்சி எனவும், ஆண் பெண்ணென்ற பாலார்க்கெல்லாம் அமைந்த
அகப்பூசல் எனவும் அறிவோமாக.


     அகத்திணை உலகக்கண் உடையது, மனித சமுதாயம் நோக்கியது.
ஞாலத்து மக்களிடை நிகழும் காமக்கூறுகளை யெல்லாம் அகத்திணையிற்
காண முயலற்க, காணவியலாது. எல்லாம் கூறுதலால் ஒருநூல் ஞால நோக்கு
உடையது என்று ஆகுமா? ஞால நோக்கெனக் கூறுதற்கு எல்லா மாந்தர்க்கும்
எஞ்ஞான்றும் பொருந்தும் உண்மையடிப் படை வேண்டும். அகத்திணை
வடிக்கும் காதற்பாங்கு தனித்தூயது, இன்பஞ் சான்றது, இறைமையுடையது,
சாதி சமயம் அரசு மொழி நாடு தொழில் செல்வம் என்றினைய புறச்சார்பற்றது;
இரண்டு உயிர்மெய்களின் ஒருமையைக் காண்பது. ஆதலின் மக்களாய்
யாண்டுப் பிறந்த யார்க்கும் உரியது; அகத்திணைக் காதலுக்குப் புறப்பொருள்
வரம்பில்லை, அகத்திணை உள்ளம் ஒன்றினார் யார்க்கும் புறனடையில்லை.


அகத்திணையாளர்கள்

     முல்லைப் பாட்டுக்கும் நெடுநல் வாடைக்கும் அரச குடும்பத்தினர்
தலைமக்களாவர். போர்க்களத்துச் சென்ற வேந்தர்களை நினைந்து தேவிமார்
பிரிவுத்துயர் படுப. நீடுயர் கூடல் நகரில் நெடுங்கொடி எழ, மீளிவேல்
தானையர் புகுந்தார் என்று மன்னனது வரவைப் பாலைக்கலி பாடும். முல்லை
ஐங்குறுநூற்றில் படைத்தலைவர்களையும் போர்மறவர்களையும் காதலர்களாகப்
பேயனார் பல பாடல்களில் அமைத்துக் காட்டுவர். பெருஞ்சின வேந்தன்
போர்த்தொழில் தணிந்தாலன்றோ என் மனைவி விருந்து பெறுவாள் என்று
பாசறை மறவன் வருந்துவான் (ஐங்.442). அரசகருமத் தொழிலாளி ஒரு
குறுந்தொகைப் பாட்டின் தலைமகன் (242). குறவன் குறத்தியர் இடையர்
இடைச்சியர் உழவர் உழத்தியர் அளவர் அளத்தியர் என்ற நானில மக்கள்
எண்ணிறந்த அகப் பாடல்களுக்குத் தலைமக்களாகப் பாடுபெறுப.