அளைமாரிப் பெயர்தருவாய் அறிதியோ அஞ்ஞான்று தளவமலர் ததைந்ததோர் கானச்சிற் றாற்றயல் இளமாங்காய் போழ்ந்தன்ன கண்ணினால் என்னெஞ்சம் களமாக்கொண் டாண்டாயோர் கள்வியை யல்லையோ (கலி.108) ‘மோர் விற்கும் பெண்ணே! செம்முல்லை மலர்ந்த சிற்றோடைக்குப் பக்கத்தே மாவடு அன்ன நின் கண்ணினால் என்னை மயக்கி என் நெஞ்சை ஆட்கொண்டாய்’ என்று ஆயநம்பி மோர் விலையாட்டியைக் கண்டு காதல் பகர்கின்றான். இரண்டு அகநானூற்றுப் பாடல்களுக்கு (140,390) உப்புவிலையாட்டி களவுக் காதலியாவாள், பல கலிப்பாடல்களுக்கு (62, 92,110,112) குற்றேவல் புரியும் சிறுதொழில் மைந்தரும் மகளிரும் காதல் மாந்தர்களாக இலங்குகின்றனர். இவர்தம் அவர்க்கேற்ற மொழி நடைப்படி புனையக் காண்கின்றோம். அகத்திணை யின்பத்திற்குப் பொருள்வளம் அடிப்படையன்று; ஒன்றிய மனவளமே அடிப்படையாகும். மனவளம் இருப்பின் பாலின்பம் சிறக்கும். ஆதலின் செல்வர் ஏழை என்ற வேறுபாடு அகத்திணைக்குப் பொருளில்லைகாண். ஓரான் வல்சிச் சீரில் வாழ்க்கை (குறுந். 295) ஓரா யாத்த ஒருதூண் முன்றில் (அகம். 369) என வரூஉம் அகப்பாடல்களுக்கு ஒரு பசுவை வைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்துவோர் தலைமக்களாவர். இப்பாடல்களில் செல்வத் தலைவியர் ஏழையாடவர்களைக் காதலித்த பெற்றியைக் கற்கின்றோம். அறிவும் ஒழுக்கமும் யாண்டுணர்ந் தனள்கொல் கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக் கொடுத்த தந்தை கொழுஞ்சோ றுள்ளாள் ஒழுகுநீர் நுணங்கறல்போலப் பொழுது மறுத்துண்ணும் சிறுமது கையளே (நற்.110) செவிலியர் வளர்த்த பெருஞ்செல்வச் சிறுமகள் மிக்க ஏழையனைக் காதலித்தாள்; அக்காதலுக்குப் பெற்றோர் உடன்படார் என அறிந்தபோது, ஏழைக் காதலனோடு உடன் போயினாள். தந்தை வீட்டில் பொழுதுவிடாது முன் உண்ட சிறுமி, இப்போது கணவனுடைய வறட்சிக்குத்தக ஒரு பொழுது உண்டு மறுபொழுது பட்டினி கிடக்கிறாள் என்றால், அகத்திணை இன்பத்திற்குப் பொருளாதாரம் அடிப்படை இல்லை என்பது தெளியப்படும். ஒரு தலைவனது வறுமைப் போராட்டத்தைக் காரிகண்ணனார் புனைந்து காட்டுவார் (அகம்.133). |