பக்கம் எண் :

அகத்திணைப் புலவர்கள்351

    நோய்நாம் உழக்குவ மாயினும் தாம்தம்
    செய்வினை முடிக்க தோழி               (அகம். 155)


தலைவனது அறவுணர்வு, மானவுணர்வு பொருளுணர்ச்சி எல்லாம்
காதலுணர்ச்சியினும் மிக்கோடுவதைக் காண்கின்றோம். காதலுடைய தலைவியை
எப்படியோ ஆற்றிப் பொருளின் பொருட்டுப் பிரிந்துபோனான் எனவும்.
அவன் செலவு தலைவிக்கு மகிழ்ச்சியை அளிக்கவில்லை எனவும் அறிந்து
கொள்கின்றோம்.

     சங்கப் பெருங் கடுங்கோவைப் போலவே இவற்றை நோபல் அறிஞர்
பெத்தரண் ரசலாரும் பொருட்காதற் பூசலை எடுத்துக் காட்டுவர். “இன்றைய
உலகில், காதலுக்கு மதத்தினும் ஒரு பெரும்பகை தோன்றியிருக்கிறது;
அதுதான் தொழிற்கொள்கையும் பொருள்நாட்டமும், காதலுக்காகத் தன்
காரியத்தைக் கெடுத்துக் கொள்ளக்கூடாது என்பது அமெரிக்காவில்
நிலவிவரும் கருத்து. கெடுத்துக்கொள்பவன் இழிந்தவன். பொருட்டுறை உட்பட
எல்லாத் துறையிலும் சமநிலைவேண்டும். காதலுக்காகத் தொழிலைப்
பலிகொடுத்தலும், தொழிலுக்காகக் காதலைப் பழிசெய்தலும் மடமையாம்”
என்று விளக்குவர். இச் சமநிலையைப் பாலைக்கலி சிலவற்றில் கற்கின்றோம்.
தலைவனது பொருள் வேட்கையும் தலைவியின் காமவேட்கையும்
முரண்போலத் தோன்றினாலும், முடிவில் நல்வாழ்வுக்கு அரண்செய்கின்றன.
பொருட்பற்றுடைய கணவன் தலைவியின் காதலை உணர்ந்து தான்
புறப்படுமுன் அவள் கூந்தலைத் தடவிக் கொடுக்கின்றான்.     

    காழ்விரி கவையாரம் மீவரும் இளமுலை
    போழ்திடைப் படாமல் முயங்கியும் அமையாரென்
    தாழ்கதுப் பணிகுவர் காதலர் மற்றவர்
    சூழ்வதை எவன்கொல் அறியேன் என்னும்        (கலி. 4)

இனிப் பன்னாள் புணர்வின்பம் கிடைக்காதே என்ற ஏக்கத்தால் முன்னாட்
புணர்ச்சிக்கண் மீதூர்ந்த இன்பச் செய்கைகள் புரிகின்றான். கணவனுடைய
கழிபெருங்களிப்பு பிரிவுக்குறிப்பு உடையது என்பதனைத் தலைவியும்
உணர்ந்து கொள்கின்றாள்; போருணர்ச்சிமிக்க தலைவனை “வலனாக வினை”
என்று வாழ்த்தி வணங்கி விடுத்த தலைவியும் உண்டு.

     பெருங்கடுங்கோவின் அகத்தலைவன் பெரும் பொருள் வேட்கையன்
எனவும், அகத்தலைவி பெருங்காம வேட்கையள் எனவும் பொதுவாகப் பல
பாடல்களிற் காண்கின்றோம். ஆதலின் தோழி பெரிதும் இடம் பெறுகின்றாள்.
புலவரின் 67 செய்யுட்களில் 40 செய்யுட்குத் தோழி கூற்றாவாள் என்று அறிக.
தலைவியின் காமத்தைத் தலைவனுக்கு எடுத்துக்காட்டி அன்பாலும்
அச்சத்தாலும் அவன் புறப்பாட்டைத் தாழ்வித்தாள். அஃதாவது
செலவழுங்குவித்தாள் எனப் பல பாடல்கள் முடிகின்றன.