| மறப்பருங் காதல் இவள்ஈண் டொழிய இறப்பத் துணிந்தனிர் கேண்மின்மற் றைஇய தொலைவாகி இரந்தோர்க்கொன் றீயாமை இளிவென மலையிறந்து செயல்சூழ்ந்த பொருள்பொரு ளாகுமோ? நிலைஇய கற்பினாள் நீநீப்பின் வாழாதாள் முலையாகம் பிரியாமை பொருளாயின் அல்லதை (கலி. 2) அறஞ்செய்வதற்கு ஈட்டுவதாயினும், அச்செல்வங்கூட ஆடவன் வாழ்க்கைக்குத் தலைமைப் பொருளில்லை, மனைவியின் இளம் புணர்ச்சிச் செல்வத்தை நோக்கின் என்று எடுத்து அறிவுறுத்தியதும், கோலின் குத்துக்கு வயப்படாக் களிறு யாழின் இசைக்கு அடங்கி நின்றாற்போலத் தலைமகன் புறப்படுவதை ஒத்திவைத்தான். தன் பொருட்செலவுக்குக் காதலி இசையாள் என்பதைத் தெரிந்த ஒரு கொழுநன் சொல்லாதே செல்லத் துணிந்தான். ஐய, நீ தேடும் பொருளுக்கு என்ன நிலையுண்டு; நல்லிசை நரம்பறுந்தால் நின்றுவிடும்; பெருந்திரு ஊழ்மாறின் ஒரு நொடியில் அழிந்து விடும்; அரசியல் மதிப்பு தலைவன் மனம் மாறின் ஓடிப்போம்; ஆதலின் அழியும் செல்வத்தை ஆர்வத்தோடு காமப்பருவத்துத் தேட முனையாதே. தன்னகர் விழையக் கூடின் இன்னுறல் வியன்மார்ப அதுமனும் பொருளே (கலி. 8) கூடிய வாழ்வே நீடியபொருள் என்று அறிவுரை செய்ய இல்லத்துச் சிலநாள் அமர்ந்தான் அத் தலைவன். காதற்றிணை அகத்திணை காதற்றிணையாதலின், இளமை காதற் பருவம் ஆதலின், கடமைக்கேனும் பிரிவதை அகவிலக்கியம் உடன்பட்டுப் பாடாதுகாண். பிரிவது கூறினும், பிரிவுணர்ச்சியுள் புணர்வெண்ணம் ஓடுவதைப் பாடிக் காட்டுங்காண். தனியியற்கையைச் சான்றோர் பாடாதது போலவே, அகத்திணைக்கண் மனைவியின் இல்லறக் கடன்களைக் காமத் தொடர்புபடுத்தாது பாடியதில்லை. கணவனின் வினைக்கடன்களையும் தலைவியின் உள்ளோட்டம் படாது புனைந்ததில்லை. பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் என்ற உரிப்பொருள் பற்றிய செய்யுட்கள் எல்லாம், பசிவழிப்பட்ட தொழில்கள் போலக் காமப்புணர்ச்சியின் அடிப்படையில் எழுந்தன. புணர்ச்சிக்குறிப்பும் வேட்கையும், காதலி அல்லது காதலன் நினைவும் இல்லாத பாலைப் பாடல்கள் உண்டுகொல்? பெருஞ்சின வேந்தன் அருந்தொழில் தணியின் விருந்துநனி பெறுதலும் உரியள் மாதோ இருண்டு தோன்று விசும்பின் உயர்நிலை உலகத்து அருந்ததி அனைய கற்பிற் குரும்பை மணிப்பூண் புதல்வன் தாயே (ஐங். 442) |