பக்கம் எண் :

அகத்திணைப் புலவர்கள்353

என்பது பேயனாரின் முல்லைப்பாட்டு. சென்ற வினை முடியாது தாழ்த்தபோது
பாசறைக்கண் இருக்கும் மறத்தலைவன் வீட்டை நினைக்கின்றான். இடைச்
சுரத்துச் செல்லும் தலைவர்கள் காதலியர் தம் பண்புகளை நினைப்பதாகப்
புனையும் பாலைச் செய்யுட்கள் பல.வினைமுடிவில் விதுவிதுப்போடு
கிழத்தியின் அழகு நலன்களைத் தலைவன் எண்ணி யூறும் முல்லைப்பாடல்கள்
பலப்பல. போர்க்குச் சென்ற தலைவனது நெடுந்தேரிற் பூட்டிய குதிரைகள்
அவன் வரவை எதிர்பார்த்து எழுநிலை மாடத்து வதியும் தேவியின்
செவிகளில் ஒலித்தன என்று முல்லைப்பாட்டை நப்பூதனார் காதல்
வாய்பாடாக முடித்துக் காட்டுவர்.

     பெருங்கடுங்கோவின் பாலைப் பாடல்களில் எல்லாம் புணர்ச்சி மயக்கம்
இருப்பதைக் காணலாம். அருகிருக்கும் போதே இத்துணை அல்லல் உறுபவள்
பிரிந்தால் உயிர் வைத்திராள் என்று தலைவன் செலவழுங்கும் பாலையிலும்,
பூ வேய்ந்த நின் கூந்தலில் தூங்கிய துயிலை மறந்து அவர்க்குத் தூக்கம்
வருமோ என்று தோழி ஆற்றும் பாலையிலும், சுரங் கடந்தோரைப் பழித்தல்
கூடாது, அவரைப் பிணித்துக் கட்டும் ஆற்றல் இல்லாத தோளே பழியுடையன
என்று தலைவி நோவும் பாலையிலும் இன்ப உள்ளங்கள் தெரிகின்றன.
ஆதலின் எல்லா அகப்பாடல்களும் முன்னும் பின்னும் புணர்ச்சியை
நோக்கியே இயல்வன என்று தெளியலாம். காமத்துப்பால் இறுதிக் குறளில்’கூடி
முயங்கப் பெறின்’ என்று திருவள்ளுவர் முடித்திருத்தல் ஒரு பெருஞ்
சான்றாகும்.

28. பேயனார்

     105 அகச்செய்யுட்களின் ஆசிரியர் பேயனார். ஐங்குறு நூற்று முல்லை
நூறு இவர் யாத்தவை. புறமாக யாதும் பாடிற்றிலர். திணைகளுள் முல்லையும்
அதன் உரிப்பொருளான இருத்தலும் இலக்கியப் புனைவுக்குப் பெரு வாய்ப்பு
நல்குவன அல்ல. புலவரின் திறத்தால் அவை வளம்பெறல் வேண்டும்.
முல்லைக்கலி நல்லுருத்திரனார் அகத்திணைக்கு உரிய முதல்
கருப்பொருள்களைத் கொண்டாரேனும், இருத்தல் பாடாது, குறிஞ்சிக்கு உரிய
புணர்தலைப் பாடி இலக்கிய வென்றி அடைந்தார். உரிப்பொருள்
மாற்றத்தாலும், ஆயர்தம் ஒழுகலாறுகளைக் கொண்டு கூறியதாலும், முல்லைக்
கலி புத்தொளி பெறுவதாயிற்று. பேயனார் முதல் கரு உரி என்ற மூன்றானும்
மரபுப்படி முல்லை நூறு பாடியவர். இந்நூறும் கற்புத்திணையன. முற்றும் மரபு
வழிப்பாடினாலும் உள்ள சிறப்புக் குன்றாது என்பதற்குப் பேயனார் அகங்கள்
எடுத்துக்காட்டு.

     புலவர் நல்ல துறைகளாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டுள்ளார்.
கற்பவர்க்கு இல்லற வழிகாட்டியாக இத்துறைப் பாக்கள் இலங்குகின்றன.
பெருவருத்தமும் பேரின்பமும் ஆகிய மிகை யுணர்ச்சிகள் இன்றி இவை
இயங்குகின்றன. பிற ஐங்குறுநூற்றுப் புலவர்கள் பெரும்பாலும் பாடல் தோறும்
துறைவேறுபடச்