பக்கம் எண் :

90தமிழ்க்காதல்

     3. எவ்வகையானும் தேறுதல் அடையாமல் மனைவி காமம் முற்றுதல்.
     4. காமம் கொண்ட மனைவியின் துணிவுச் செயல்.

     இத்திணைக்கு உரியன பத்து பாடல்களே; ஆசிரியரும் நல்லந்துவனார்
ஒருவரே. இப்பத்தும் கலித்தொகை நெய்தற்றிணையில் (138-147)
காணப்படுவன. இவற்றுள் நான்கு ஆண்பாற் பெருந்திணையும், ஆறு
பெண்பாற் பெருந்திணையுமாமம்.


     கைக்கிளை பெருந்திணைப் பாடலெல்லாம் கலிப்பாவில்
அமைந்திருப்பது ஏன்? சங்ககாலத்து ஆசிரியப்பாவிற்குப் பெருவழக்கும்
நன்மதிப்பும் இருந்தும், இத்திணைகள் இப்பாவில் ஏன் பாடுபெறவில்லை?
ஐங்குறுநூறு குறுந்தொகை நற்றிணை அகநானூறு என்ற நான்கும்
ஆசிரியப்பாவில் இயன்ற அகத்தொகைகள். ஆயிரத்துக்கு மேலான பாடல்கள்
உடைய இத்தொகைகள் முற்றும் ஐந்திணைத் துறைகளே கொண்டவை என்றும்,
கைக்கிளை பெருந்திணைக் குறிப்புக்கள் மருந்துக்குங்கூட இல்லை என்றும்
எளிதாக முடிவு சொல்ல என் அறிவு துணியவில்லை. துறை யாராய்ச்சியைத்
தனிப்பொருளாகக் கொண்டு சங்கத் தொகைகளை ஆய்வோமேல், சில
அகவற்பாக்கள் கைக்கிளை பெருந்திணைகளாகவும் காணப்படும் என்பது என்
கருத்து.1 இதுகாறும் எழுதப்படாத நல்ல துறைகளும் சில செய்யுட்களுக்குப்
புலனாகும். என் திணையாராய்ச்சிக்கு இத்துறையாராய்ச்சி உட்பட்டதேனும்,
இரண்டினையும் ஒருங்கு மேற்கொள்வது மயக்கந்தரும் ஆகலானும்,
பெரும்பாலான துறைகள் பொருந்தும் ஆகலானும், சில துறைகள்
வேறுபடுதற்காக யான் கருதும் முடிபுகள் பிழையா ஆகலானும்,
துறையாராய்ச்சியைத் தனி யுறுப்பு மருத்துவம் போல்வது

என்று விட்டமைந்தேன்.
 ____________________________________________________
    குறுந். 78 கைக்கிளைத் திணையாகவும், அகம். 135; குறுந் 31; 326
    பெருந்திணையாகவும் கருதலாம்.